மீண்டும் மோடி! டென்ஷனில் விஜய்! பதறும் எஸ்ஏசி!

மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமையும் என்று வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் நடிகர் விஜய் டென்சனில் இருப்பதாகவும் அவரது தந்தை எஸ்ஏசி பதற்றத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னையில் இன்று ஒரு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனரும் நடிகரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தேர்தல் கருத்துக் கணிப்புகளை சுட்டிக்காட்டி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

கருத்துக் கணிப்புகளை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் நாம் தப்பித்து விட்டோம் என்றே தெரிகிறது ஆனால் இந்தியாவில் அனைவரும் காவி வேட்டிக் கட்டிக் கொண்டு ஓட வேண்டிய நிலை வந்து விடும் என்று மிகுந்த கோபத்துடன் கூறிவிட்டு பேச்சை முடித்தார். ஒரு சினிமா படவிழாவில் அதுவும் குறும்பட விழாவில் அரசியல் பேசுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் அனைவரும் காவி வேட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு எஸ் ஏ சந்திரசேகர் பேச வேண்டிய அவசியம் ஏன் என்று கேள்வி எழுந்தது.

எஸ் ஏ சந்திரசேகர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். அதனால் இயல்பாகவே அவருக்கு மோடி எதிர்ப்பு மனநிலை இருக்கும். ஆனால் எஸ் ஏ சந்திரசேகரை பொதுவாக தற்போது யாரும் ஒரு இயக்குனராக பார்ப்பதில்லை. மாறாக விஜயின் தந்தையாகவும் அவரது ரசிகர் மன்ற பொறுப்புகளை கவனித்துக் கொள்பவராகவுமே பார்க்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் திரைப்படவிழாவில் மோடிக்கு எதிராகவும் எடப்பாடியை கிண்டல் செய்யும் வகையிலும் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதில் பல்வேறு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதிலும் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியை கோவைக்கு தேடிச் சென்று சந்தித்தார் விஜய். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் விஜய்யின் ஆதரவு பாஜகவுக்கு என்று ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு விஜய்யை பாஜக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை வேறு நடைபெற்றது.

இதனால் பாஜக மீதும் மோடி மீதும் விஜய் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயல்பாகவே அதிருப்திக்கு உள்ளாகினர். இதனால்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடிகர் விஜய் செய்தியாளர்களை அழைத்து அதற்கு எதிராக கருத்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பாஜக தரப்பில் இருந்து விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது. மெர்சல் திரைப்படத்தில் விலங்குகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி அப்படத்தை வெளியிட விடாமல் மத்திய விலங்குகள் நலவாரியம் இடையூறு ஏற்படுத்தியது.

இப்படி பாஜக அரசால் விஜய்யும் அவரது திரைப்படமும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இதே நிலை நீடிக்கும் என்பதால் தான் கருத்துக் கணிப்புகளை பார்த்து விஜய்யும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் எரிச்சலடைந்து உள்ளதாகக் கூறுகிறார்கள்