மீண்டும் காஷ்மீர் லடாக்கில் நிலநடுக்கம். என்ன பாதிப்பு?

சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காஷ்மீரின் லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று முற்பகல் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


இதுவரை இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வரவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று திடீரென, ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.

அதையடுத்து அம்மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இரண்டு பிரதேசங்களுக்கும் தனித்தனியான துணைநிலை ஆளுநர் வசம் நிர்வாகம் கைமாற்றப்படும் நிலை ஏற்பட்டது. அங்கு சட்டப்பேரவை முடக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நிலை இன்னும் நீடிக்கிறது. இச்சூழலில் லடாக் பிரதேசத்தில் இன்று முற்பகல் 11.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இது 3.6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது, 32.6 பாகை வடக்கிலும் 78.9 பாகை கிழக்கிலுமாக ஏற்பட்டிருந்தது. 16 கிமீ ஆழம் வரை அதன் அதிர்வு உணரப்பட்டது என்று காஷ்மீரத்து வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்புகள் குறித்த அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.