உயிரிழந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட இளம் பெண் சடலம்! அதிர வைக்கும் காரணம்!

நிரபராதி ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடல் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


2007ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவா அருகே 19 வயது மாணவி ஆயிஷா மீரா என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2008ம் ஆண்டு சத்யம் பாபு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவருக்கு 2010ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால் இதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தன் மகளை கொன்றவர்களை விட்டு விட்டு ஒரு அப்பாவிக்கு தண்டனை கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மகள் இறந்தபோது இருந்த தடயங்களை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து மேல்முறையீட்டை மனுவை விசாரித்த ஐதராபாத் உயர்நீதிமன்றம் 2017ல் தலித் இளைஞர் சத்யம் பாபுவை விடுவித்தது.

மேலும் பொய்யான ஆதாரத்தை சமர்ப்பித்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை எஸ்ஐடி கையில் எடுத்தது. ஆனால் அந்த விசாரணையிலும் திருப்தி அடையாத நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு குண்டூர் மாவட்டம் தெனாலி நகரில் புதைக்கப்பட்ட மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

இதற்கிடையே ஆந்திராவின் திஷா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் முதல் வழக்கு இதுவாக இருப்பதை உறுதி செய்யுமாறு ஆயிஷாவின் தாய் ஷம்ஷாத் பேகம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தெரிவித்தார்.