என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்சம்…

கொரோனா காட்டிய வழியினால் இன்று வீட்டு உணவை உண்டு, முடிந்த வரை வீட்டிலேயே வாழ்ந்துவருகிறோம் ஆனால், வீட்டுக்குள்ளே இருக்கும்போது தோன்றும் நோய் உணர்வு மாறுபட்டதாக இருப்பதாக ஒரு பதிவு உலா வருகிறது.


உடம்பு சரியில்லாமல் அடிக்கடி போய்விடுவது தொந்திரவாக இருப்பதைவிட அவமானமாகவும் இருக்கிறது. அதை வெளியே சொல்ல வேண்டியிருப்பது அதைவிட அவமானகரமாக இருக்கிறது .முன்பு போல ஒருவர் தான் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் துக்கமாக இருப்பதையும் ரகசியமாக வைத்துக்கொள்ள அரச சமூக எந்திரங்கள் இப்போது அனுமதிப்பதில்லை.

முன்பு எப்போதை விடவும் அரசுகளுக்கு நமது உடல்கள் மீதான அதிகாரம் அதிகரித்துவிட்டது.போர்,வன்முறை சட்ட அச்சுறுத்தல் போன்ற கருவிகள் போல மருத்துவமும் சிகிச்சையும் கூட அதிகாரத்தின் கருவிகளாகிவிட்டன.இப்பொழுது உங்களுக்கு ஏற்படும்.எந்த ஒரு வியாதி குறித்தும் தனியான அபிப்பிராயங்கள் வைத்துக்கொள்ள முடியாது. உங்கள் அரசாங்கம் வைத்துக்கொண்டு இருக்கின்ற அபிப்பிராயத்தோடு நீங்கள் ஒத்துப் போயே ஆகவேண்டும்.

அரசாங்கத்தின் அபிப்பிராயத்தை மருந்து கம்பெனிகளும் அரசியல் அமைப்புகளும் தீர்மானிக்கின்றன. கொரோனாவுக்கு குவினைன் தான் என்றோ கோமியம்தான் மருந்து என்றோ உங்கள் அரசாங்கம் தீர்மானித்து விட்டால் நீங்கள் ஒன்றும் சொல்லமுடியாது. இவை அரசியல்வாதிகள் பெரிய எழுத்தில் சொல்லும் பொய்கள்.

மருந்து கம்பெனிகள் தங்கள் மருந்துப் புட்டிகளின் லேபிள்களில் சொல்லும் பொடி எழுத்துப் பொய்கள் இன்னும் நுட்பமானவை.ஏனெனில் இவை அரசியல் வாதிகளையும் ஏமாற்றக் கூடியவை. இப்போது சிகிச்சை என்பது கொடுமையானதாக மாறிவருவதால், நோயுடன் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் கொரோனா கால ஆச்சர்யம்.