கடந்த மே 7-ஆம் தேதி முதல் தமிழக அரசின் உத்தரவின்படி மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் , சமூக இடைவெளி உள்ளிட்ட நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படாததால் சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலம் முடியும் வரை மதுபான கடைகளை மூடும்படி உத்தரவிட்டிருந்தது
கமல் களம் இறக்கிய ஒத்த வழக்கறிஞர்..! நீதிமன்றத்தில் அதிர்ந்த தமிழக அரசு..! டாஸ்மாக் மூடப்பட்டதன் பரபர பின்னணி!

தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த மே 7-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருவதால் மதுபான கடைகளை திறக்கக் கூடாது என சில பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தில் போடப்பட்டது. விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய முடியாது. மதுபான கடைகளில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு மதுபான கடைகளை திறக்க அனுமதி தந்தது. கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் மதுபான கடைகள் மீண்டும் மூடப்படும் என நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.
இதன் காரணமாக தமிழக அரசு 6 அடி இடைவெளி விட்டு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் வயது வாரியாக பிரித்து அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மதுபானங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகமெங்கும் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் கூட்டம் அலை மோதியதால் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனால் உயர்நீதிமன்றம் அளித்த நிபந்தனைகள் மீறப்பட்டதாக கூறி மதுபான கடைகளை மீண்டும் மூட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மற்றும் சில அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதில் மக்கள் நீதி மையம் சார்பில் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் என்ற மூத்த வழக்கறிஞர் வாதாடியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டதன் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் இந்த வழக்கில் ஆஜரானது அரசுத் தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் யாவும் மதுபான கடைகளில் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் அவர்கள் கூறினார். 40 நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. இனி அவ்வாறு இருக்காது என தமிழக அரசு முறையிட்டது. எனினும் நிபந்தனைகள் சரியாக பின்பற்ற படாததால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகள் திறக்கப்பட கூடாது என அதிரடியாக உத்தரவிட்டது. வேண்டுமென்றால் ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சி ஆரம்பித்து தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது என்பதால் அக்கட்சி நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இது எங்களுக்கு கிடைத்த வெற்றியல்ல மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.