உறுதியானது கூட்டணி! எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்சை சந்திக்கிறார் ராமதாஸ்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க – அ.தி.மு.க கூட்டணி உறுதியாகியுள்ளதால் ராமதாஸ் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்சை சந்திக்க உள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி என்று பா.ம.க எப்போதோ முடிவெடுத்துவிட்டது. ஆனால் தி.மு.க – அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுடனும் பா.ம.க சார்பில் பேசப்பட்டு வந்தது. அன்புமணி தி.மு.க கூட்டணியில் ஆர்வத்துடன் இருந்தார்.

ஆனால் ராமதாசோ பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியில் இணைய விரும்பினார். இதனால் கூட்டணி விவகாரத்தில் பா.ம.க மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அ.தி.மு.கவும் சரி தி.மு.கவும் சரி பா.ம.கவிற்கு 4 தொகுதிகள் என்கிற நிலையில் உறுதியாக இருந்தன.

இதனால் எந்த கூட்டணியில் இணைவ’து என்று பா.ம.க குழப்பத்தில் இருந்தது. இறுதியில் தொகுதியுடன் சேர்த்து கூடுதலாக சில அம்சங்களையும் தருவதாக அ.தி.மு.க கூறியுள்ளது. அதாவது மாநிலங்களவை எம்.பி பதவி என்கிற ஆசை வார்த்தையுடன், தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையும் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தி.மு.க தரப்பில் தொகுதி செலவுக்கு என்று எதுவும் கூறப்படவில்லை. இதனால் தி.மு.விற்கு அ.தி.மு.க பெட்டர் என்று பா.ம.க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே முதல்கட்டமாக கூட்டணியை உறுதிப்படுத்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ராமதாஸ் சந்திக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

நாளையில் இருந்து என்று வேண்டுமானாலும் இந்த சந்திப்பு நிகழலாம் என்று கூறுகிறார்கள். கூட்டணியை உறுதி செய்துவிட்டு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பா.ம.க ஒப்புக் கொண்டுள்ளது. அதே சமயம் வட மாவட்டங்களில் தாங்கள் கேட்கும் தொகுதியை அ.தி.மு.க தரும் என்றும் பா.ம.க கருதுகிறது.

இதனால் தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று ராமதாஸ் கருதுகிறார். எனவே எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்சை சந்தித்து கூட்டணியை இறுதி செய்துவிட்டு தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்ட ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க மற்றும் பா.ம.கவிற்கு பொதுவான ஒரு இடத்தில் இந்த சந்திப்பு நிகழும் என்கிறார்கள். பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை இறுதியான பிறகு தொகுதி விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.