அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனையில் தன் மனைவியின் பிரசவத்தை பார்த்துள்ளார்! குவியும் பாராட்டுக்கள்..!.

எந்த ஒரு சிறிய நோய் என்றாலும் அப்பல்லோ, காவேரி என்று பெரிய மருத்துவமனைகளைத் தேடியே ஓடும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தன்னுடைய மனைவியை பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்து பாராட்டு பெற்றுள்ளார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.


ஆம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜ் தான் அந்த பெருமைக்கு உரியவர். அவரது மனைவிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில், போட்டியிட்டு மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்றவர். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். கடந்த திருமணமாகி 16 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை.

இந்த நிலையில், 16 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக எம்எல்ஏ நாகராஜ் மனைவி சிவசங்கரி கருவுற்றார். இதனால் வழக்கமாக சிகிச்சை பார்த்து வந்த தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு சென்று மருத்துவம் பார்த்தனர். எம்எல்ஏ மனைவியாக இருந்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தினால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்த்த சிவசங்கரிக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதே மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே கொரோனா நோயாளிகள் வார்டு உள்ளது குறிப்பிடதக்கது. ஆனாலும், தைரியமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு புதிய பாதையைக் காட்டியுள்ளார் நாகராஜ்.

அரசு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கிங்ஸ் மருத்துவமனையில் தன்னுடைய குடும்பத்தைச் சேர்த்தது போன்று, நாகராஜூம் கொரோனா காலத்து ஹீரோவாக மாறியிருக்கிறார். வாழ்த்துவோம்.