அ.தி.மு.க. மட்டும் தான் மேகதாது அணை கட்டவிடாமல் தடுத்துவருவது! இதோ, ஆதாரங்கள்..

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக திமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், ’தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்’ என பிரதமர் உறுதியளித்ததாகவும் செய்திகள் கிளப்பிவிடப்படுகின்றன.


ஆனால் உண்மை என்ன தெரியுமா? கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா, காவிரியில் மேகதாது அணையைக் கட்டவிருப்பதாக அறிவித்தார். உடனடியாக அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி கடிதம் எழுதினார்.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதன் பின்னர் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரான நிலையில் அவருக்கும் இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறுவதாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் எதிரொலியாக கர்நாடக அரசு, மத்திய அரசிடம் இந்தத் திட்டம் தொடர்பாக தாக்கல் செய்திருந்த சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆய்வுக்குழு திருப்பியனுப்பியது.

பின்னர் 2018 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். மேகதாது பிரச்சனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என்றும், தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா மத்திய நீர்வள கமிஷனை அணுகுவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை மீறி மத்திய நீர்வள கமிஷன், கர்நாடக அரசின் முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் மத்திய நீர்வள கமிஷனின் செயல்பாடு, தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், எனவே பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு மத்திய நீர்வள கமிஷன் அளித்துள்ள ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

2018 டிசம்பரில் இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி மத்திய நீர்வள கமிஷன் அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்ய கோரியது. இது குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய அரசுக்கும், கர்நாடகா அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரிவான கடிதங்களை எழுதினார்.

ஜனவரி 2020 நடைபெற்ற காவிரி மேலாண்மை குழுவின் முதல் கூட்டத்திலேயே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது, அதுபோலவே அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, எத்தகைய சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்ட தமிழகம் அனுமதிக்காது என உறுதிபட கூறினார்.

மேகதாது பிரச்சனையில் ஆண்டாண்டு காலமாக அதிமுக அரசு மேற்கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் பட்டியலிட முடியும். உண்மைகள் இவ்வாறு இருக்க, இந்தப் பிரச்சனையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை திமுக அடுக்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.