சசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டிடிவி தினகரன்

இத்தனை நாட்களும் அமைதியாக வாயைப் பொத்திக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு இன்றுதான் கொஞ்சமாக முகத்தில் பொலிவு வந்திருக்கிறது. ஏனென்றால், இன்றுதான் சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, 10 கோடி ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டதால், பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணத்தை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினரும், அ.ம.மு.க. கட்சியின் தலைவருமான டி.டி.வி. தினகரன், "சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். அவர் எப்போது மருத்துவமனையிலிருந்து அனுப்பப்படுவார் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அதை பொருத்தே, அவரை எப்போது தமிழகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்பது தொடர்பாக முடிவு செய்வோம்" என்று கூறினார்.

சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது, அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்குத்தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது என்று மட்டும் தெரிவித்தார். அதாவது, சசிகலாவை முன்வைத்து மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றும் பணியில் இறங்க இருப்பதாக் தெரிவித்திருக்கிறார் தினகரன். ஆனால், இப்போது எடப்பாடி தலைமையில் அ.தி.முக. வலுவாகவும் உறுதியாகவும் இருப்பதால், இலவு காத்த கிளி போல் மாறப்போகிறார் தினகரன் என்பதுதான் அ.தி.முக.வினரின் பேச்சாக இருக்கிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் கூடிய கூட்டம் இதைத்தான் உறுதிபடுத்தியிருக்கிறது. 

சசி தினகரனை நம்பி ஏமாறாமல் இருந்தால் சரிதான்.