விக்கிரவாண்டியில் அடிச்சுத் தூக்கும் அ.தி.மு.க. அசமந்தமாக இருக்கும் தி.மு.க! என்ன செய்யப்போகிறது பா.ஜ.க?

இடைத்தேர்தல் பரபரப்பு இன்றே விக்கிரவாண்டியில் தீப்பிடித்தது போன்று பற்றிக்கொண்டது. ஆம், இன்று விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற முதல் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கட்சியினருக்கு பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.


ஏனென்றால் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 18 அமைச்சர்கள் கலந்துகொண்டு அ.தி.மு..வை வெற்றிபெற வைப்போம் என்று பேசினார்கள்.. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் பேசும்போது அம்மாவைப் போல் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் இயக்கம் அ.தி.மு.க. என்றவர். சாதாரண தொண்டரான என்னை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நன்றி தெரிவித்தார்.

இதன் மூலம் சண்முகம்தான் தன்னை தேர்வு செய்தவர் என்பதை வெளிப்படையாக அறிவிப்பு செய்தார். அடுத்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கம் போல் திமுக தலைவர் ஸ்டாலினை கன்னாபின்னாவென்று விளாசிவிட்டு, இனிமேல் எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்றார் காட்டமாக.

இந்தத் தொகுதியில் பா.ம.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்குவங்கி உள்ளன. அதனால்தான் இருவரையும் வம்படியாக அழைத்துவந்துள்ளனர். பா.ஜ.க. வராமல் இருந்தால் நல்லது என்றுதான் இந்த நிமிடம் வரை அ.தி.மு.க. ஆசைப்படுகிறது.

ஆனால், தாங்கள் பிரசாரத்துக்குப் போகாமல் ஒருவேளை அ.தி.மு.க. ஜெயித்துவிட்டால், அடுத்த தேர்தல்களிலும் இதே நிலை ஏற்பட்டுவிடுமே என்று அச்சப்படுகின்றனர். அதனால் எப்படியாவது தேர்தலில் களம் இறங்கியே தீருவார்களாம். பாவம் அ.தி.மு.க.