விறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு. அதிர்ந்து நிற்கும் தி.மு.க.

ஜெயலலிதா பாணியில் எதிலும் வேகம், எதிலும் முதல் இடம் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல். வேட்புமனு தாக்கல் அறிவிப்பு முதன்முதலில் வெளியிட்டது அ.தி.மு.க.தான்.


தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து உடனடியாக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. இறங்கிவிட்டது.

வன்னியர்கள் எதிர்பார்த்த உள் இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டதுமே, அவர்களுடன் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. பா.ம.க.வினர் முதல்வரை பார்த்து மனதார வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.

அதேபோன்று அமித் ஷா வருவதாக இருக்கும் சூழலில், பா.ஜ..க.வுடனும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமித் ஷாவை சந்திக்கும் நேரத்தில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவர அ.தி.மு.க. விரும்புகிறது. 

சென்னை, பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்பன குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படாது என்றே இரு தரப்பிலும் கூறுகின்றனர். 

ஆனால், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது மட்டும் உறுதி செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதன்படி பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும் பா.ஜ.க.வுக்கு 22 தொகுதிகளும் கொடுப்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து தே.மு.தி.க., ஜி.கே.வாசன் ஆகியோரிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இத்தனை வேகமாக அ.தி.மு.க.வில் முடிவுகள் எடுக்கப்படும் என்பதை அறியாத தி.மு.க. தரப்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.