திருவாரூர் இடைத்தேர்தலில் முக்கியமான அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல்! அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் இவர்கள் தான்!

ஆளும் அ.தி.மு.க வை பொறுத்தவரை திருவாரூர் மாவட்டச் செயலாளரும்
உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் எடுக்கும் முடிவு தான் திருவாரூர் வேட்பாளரை தீர்மானிக்கும்.
யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என காமராஜிடம் இரண்டு நாட்களுக்கு முன்னரே ஓ.பி.எஸ் மற்றும்
ஈ.பி.எஸ் பரிந்துரைக்குமாறு கோரியுள்ளனர். இதனை ஏற்று திருவாரூர் மாவட்ட அம்மா பேரவையில்
உள்ள கலியமூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் பன்னீர் செல்வம்
ஆகியோர் பெயர்களை காமராஜ் பரிந்துரைத்துள்ளார்.
கலியமூர்த்தி – பன்னீர்
செல்வம் இருவருமே அமைச்சர் காமராஜூக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களில் அமைச்சரின்
கான்ட்ராக்ட் வேலைகளை பன்னீர் செல்வம் கவனித்து வருகிறார். கலியமூர்த்தியோ அமைச்சரின்
நிழல் போன்றவர். அமைச்சர் எங்கு இருக்கிறாரோ அங்கு கலியமூர்த்தியை பார்க்க முடியும்.
இரண்டு பேரை காமராஜ் பரிந்துரைத்திருந்தாலும் கலியமூர்த்தியை திருவாரூர் வேட்பாளராக்க
வேண்டும் என்று காமராஜ் காய் நகர்த்தி வருகிறார்.
எனவே கலியமூர்த்தி
தான் திருவாரூர் தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளர் என்று தற்போதே பேச்சுகள் அடிபட ஆரம்பித்துவிட்டன.
இதே போல் கலியமூர்த்தியும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் தான் வேட்பாளர் என்று தெரிவித்து
வருவதாக தகவல்கள் வருகின்றன. அதே சமயம் செலவு என்று வந்தால் கலியமூர்த்தியை விட பன்னீர்
செல்வம் திறமையானவர், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் அவருக்கு உள்ளது.
தி.மு.கவை பொறுத்தவரை
மு.க.ஸ்டாலினே போட்டியிடக்கூடும் என்று தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் அந்த
முடிவில் இருந்து அவர் பின்வாங்கிவிட்டார். இதனால் திருவாரூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவை
களம் இறக்க ஸ்டாலின் திட்டமிட்டார். மன்னார்குடியில் ஏற்கனவே டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி
ராஜா தான் எம்.எல்.ஏ. அந்த வகையில் திருவாரூர் பகுதி டி.ஆர.பாலுவுக்கு நெருக்கமானது.
மேலும் கரன்சி வகையிலும் டி.ஆர்.பாலுவுக்கு இணையான ஒரு நபர் திருவாரூரில் வேறு எந்த
கட்சியிலும் இல்லை.
எனவே டி.ஆர்.பாலுவை
தி.மு.க வேட்பாளராக களம் இறக்க ஸ்டாலின் முடிவெடுத்த நிலையில் அந்த முடிவை ஏற்க பாலு
மறுத்துவிட்டார். இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து தி.மு.க வேட்பாளராக திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன்
இறுதி செய்யப்பட்டுள்ளார். கலைவாணனை விரைவில் ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்க உள்ளார்.
இதே போல் அமமுகவை
பொறுத்தவரை தினகரன் வேட்பாளரை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை
அ.ம.மு.கவின் மாவட்டச் செயலாளர் காமராஜ் தான். இவர் தான் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு
செம டப் கொடுக்க கூடியவர் என்பதில் தினகரனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. பணம் செலவழிப்பதிலும்
காமராஜ் எந்த தயவு தாட்சன்யமும் காட்டாதவர். இதனால் காமராஜ் விரைவில் அமமுக வேட்பாளராக
அறிவிக்கப்பட உள்ளார்.