185 தொகுதியில் போட்டியிடும் இரட்டை இலை... கெத்து காட்டும் எடப்பாடி பழனிசாமி

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. தே.மு.தி.க. வெளியேற்றத்தால் அ.தி.மு.க.வினர் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதிக தொகுதிகள் கேட்ட தே.மு.தி.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.

ஆகவே, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம் அடைந்தது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இரவு முழுவதும் ஆலோசனை நடத்தினார்கள்.

முதலில் பா.ஜ..க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் பாரதிய ஜனதா போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து இறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு இரவு 12.15 மணிக்கு ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க நிர்வாகிகள் அ.தி.மு.க தலைமைக்கழகம் வந்தனர். நள்ளிரவு 2 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 23 தொகுதிகளில் கேட்ட தொகுதிகள் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்ததால் பா.ம.க.வினர் மிகவும் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர்.

அதன்பிறகு அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பட்டியலை இறுதி செய்யும் போது பக்கத்து அறையில் அமர்ந்து இருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரையும் அழைத்து வேட்பாளர் பற்றிய விவரம் கேட்டறிந்தனர். பாரதிய ஜனதா - பா.ம.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த இடங்கள் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியை ஓரளவு முடித்தனர்.

இன்னும் த.மா.கா., புதிய நீதி கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டி உள்ளதால் அந்த கட்சிகள் போட்டியிட உள்ள இடங்களை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.

சுமார் 185 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.