மேதகு தமிழிசை செளந்தர்ராஜனை புறக்கணித்த அ.தி.மு.க.? என்னதான் நடக்கிறது கூட்டணியில்? தெலுங்கானாவில் கட்டாய யோகா!

அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் படு மும்முரமாக இருந்துவரும் நேரத்தில், பா.ஜ.க. மட்டும் இன்னமும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கொடுக்காமல் அமைதிப்பூங்காவாக காட்சி தருகிறது.


அதனால்தானோ என்னவோ, இன்று தமிழிசை செளந்தர்ராஜனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அ.தி.மு.க.வை காணவில்லை. தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றுள்ள தமிழிசைக்கு முதல் முறையாக சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் பாராட்டு விழா நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் த மா.க மூத்த தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக தலைவர் ஜி.கே.மணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம்,தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், என்ன காரணத்தாலே அ.தி.மு.க.வை சேர்ந்த யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த விழாவில் பேசிய தமிழிசை, ’’ என் உழைப்புக்கு அங்கீகாரமாக ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பேட்டி கொடுத்தால் கண்டனமும் கிண்டலும் வரும். இப்போது, ‘உங்களால் பெருமைப்படுகிறோம்’ என்று சொல்கிறார்கள்.

கவர்னரானதும் நான் ஓய்வில் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் காலை 8 மணி முதல் இரவு 9 மணி பணியாற்றுகிறேன். ராஜ்பவனில் அனைவரும் காலை 5.30க்கு எழுந்து கட்டாய யோகா செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துவிட்டேன். பிரதமரின் ஃபிட் இண்டியா மூவ்மெண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத ஆளுநர் மாளிகையை உருவாக்கி வருகிறேன்” என்று சந்தோஷமாக பேசியிருக்கிறார்.

நல்லா இருக்கட்டும்.