பிப்ரவரி 24! பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை! அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் பிரம்மாஸ்திரம்!

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்ய மத்திய பா.ஜ.க அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். ஆனால் மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசுகள் 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மத்திய அரசை மீறி தமிழக அரசால் 7 பேரையும் விடுவிக்க முடியவில்லை.

இருந்தால் உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு ஏழு பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுடன் ஏழு பேரையும் மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதின்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

உடனடியாக அமைச்சரவையை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, ஏழு தமிழர்களையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த பரிந்துரையை தற்போது வரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிடப்பில் போட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க – அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணியில் இணைய பா.ஜ.கவிற்கு அ.தி.மு.க விதித்த முதல் நிபந்தனையே ஏழு பேரையும் விடுவிக்க ஆளுநரை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்பது தானாம்.

கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தொகுதி உடன்பாட்டிற்கு முன்னதாகவே தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி கோரியுள்ளார். இதனை ஏற்று ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய இன்ஸ்ட்ரக்சன்களை மத்திய அரசு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மேலும் சில கைதிகளுடன் சேர்த்து பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக ஏழு பேரையும் விடுவித்து தமிழக அளவில் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் ஆதரவை அப்படியே அள்ளிவிட எடப்பாடி எடுத்துள்ள இந்த முடிவு தி.மு.க கூட்டணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மூலம் தமிழகத்தில் எடப்பாடியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஏழு பேரையும் விடுவிக்கும் பட்சத்தில் எலக்சனில் அது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று எடப்பாடி தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.