காசிக்கு பிறகு கோவையில் தான்..! ஆதியோகி அடிவாரத்தில் சப்தரிஷி ஆர்த்தி!

காசிக்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் நடந்த சப்தரிஷி ஆரத்தி.


காசி விஸ்வநாதர் கோவிலைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர் கோவை காசி விஸ்வநாதர் கோவிலில் மட்டுமே நடக்கும் சப்தரிஷி ஆரத்தி கோவை ஆதியோகி முன்பு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்தில் இன்று (ஜனவரி 12) நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆதியோகியின் அருளில் மூழ்கி திளைத்தனர்.

யோக கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முழுமுதற்காரணமாக இருந்தவர் சிவன். ஆதியோகியான அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் அவரின் மார்பளவு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்துக்கு சக்தியளிக்கும் விதமாக யோகேஸ்வர லிங்கத்தை, சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்துள்ளார். 


இந்த லிங்கத்துக்கு 2017-ம் ஆண்டு முதல் அகஸ்தியர் ஜெயந்தியன்று சப்தரிஷி ஆரத்தி என்னும் சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 3-வது முறையாக சப்தரிஷி ஆரத்தி இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை (ஜனவரி 12) நடைபெற்றது.

இந்த ஆரத்தி செயல்முறையை காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து வந்திருந்த 7 உபாசகர்கள் நடத்தினர். யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்த ஏழு உபாசகர்களும் சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவங்கினர். படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில் உருவாக்கியது.


இதை ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாகவும், லட்சக்கணக்கான மக்கள் யு-டியூப் நேரடி ஒளிப்பரப்பு மூலமாகவும் பங்கேற்று ஆதியோகியின் அருளில் மூழ்கி திளைத்தனர். சப்தரிஷி ஆரத்தியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு பேசியுள்ளதாவது:

சப்தரிஷிகள் ஏழுபேரும் சிவனுக்கு குரு தட்சணையாக எதனை வழங்கலாம் என யோசித்தபோது, தமிழரான அகஸ்திய முனி தனக்கு சிவன் வழங்கிய அந்த 16 வகையான முறைகளையும் அர்ப்பணிப்பாக வழங்கினார். அகஸ்தியரைப் பின்பற்றி மற்ற ஆறுபேரும் அதனையே செய்தனர். தாங்கள் சிவனிடமிருந்து பெற்ற ஞானத்தையெல்லாம் அர்ப்பணித்துவிட்டு வெறுமையாக சென்றதால், முழுமையாக 112 யோக வழிமுறைகளுமே சப்தரிஷிகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துவிட்டன.