மார்பகங்களில் பிரச்சனையா? கூச்சம் இன்றி கூறுங்கள்! வரலட்சுமி சொல்லும் காரணம்!

மார்பகத்தில் பிரச்சனை எற்பட்டால் வெட்கப்படாமல் பெண்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலைய வளாகத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மார்பகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் பெண்கள் கூச்சப்படாமல் தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பக் கட்டத்தில் வெட்கப்படாமல் தெரிவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று குணமாகி விடலாம் என்றும், வெளியில் சொல்ல அச்சப்பட்டு அமைதியாக இருந்தால் பின்னர் ஆபத்து ஏற்படும் என்றும் பேசினார். மார்பக புற்றுநோய் குணப்படுத்தப்படக் கூடிய ஒன்றுதான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் ஸ்ரீகுமார், காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியென்பதால் விமான நிலைய வளாகம் முழுவதும் பிங்க் நிறத்தால் ஆன பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.