தயாரிப்பாளரின் தவறான எதிர்பார்ப்பு என்னிடம் நடக்காது! கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகை திடுக் பேட்டி!

சென்னை: ''என்னை யாரும் கடத்தவில்லை,'' என்று தொரட்டி பட நாயகி பேட்டி அளித்துள்ளார்.


ஷாமன் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக, தொரட்டி படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷாமன் ஹீரோவாக நடிக்க, சத்தியகலா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின்  அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில், படத்தின் ஹீரோயினை காணவில்லை எனக் கூறி, பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

சத்தியகலா சினிமாவில் நடிப்பதை அவரது தந்தையும், வளர்ப்புத் தாயும் விரும்பவில்லை என்றும், அதனால் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும், ஆட்கொணர்வு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி, உடனடியாக சத்தியகலாவை நேரில் ஆஜர்படுத்தும்படி அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில், திடீரென சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சத்தியகலா, ''என்னை யாரும் கடத்தவில்லை.  நான் நலமுடன் உள்ளேன். என் குடும்பத்தினருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் குடும்பத்தின் நற்பெயரை கெடுக்கும் வகையில் சிலர் இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர். படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை மறைப்பதற்காக, இப்படி ஒரு நாடகத்தை தொரட்டி படக்குழுவினர் நடத்தியுள்ளனர்,'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தயாரிப்பாளரின் செயல்பாடு மதிக்கத்தக்க வகையில் இல்லை. அதனால் நான் படத்தின் புரமோசனுக்கு செல்லவில்லை என்று சத்யா கூறினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் உங்களுக்கு பாலியல் தொல்லைகள் எதுவும் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி கேட்டனர். அதற்கு அது குறித்து  வெளிப்படையாக பேசவிரும்பவில்லை என்ற சத்யா, ஒப்பந்தப்படி ஒரு முறை பட புரமோசனுக்கு சென்று வந்தேன்.

ஆனால் அடிக்கடி அழைத்தனர், தயாரிப்பாளரின் தவறான நோக்கம் எனக்கு புரிந்தது. அதனால் நான் அவர்களுடன் தொடர்ந்து வேலை பார்க்க விரும்பவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு ஒரு போதும் நிறைவேறாது என்று சத்யா கூறினார். இதனால், தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.