சென்னை: ''எனது கணவர் ராமராஜனை பார்த்துத்தான், நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்,'' என்று நளினி தெரிவித்துள்ளார்.
அந்த ஹீரோவுடன் அந்த படம்! என்னை என் அம்மா கட்டாயப்படுத்தினார்! மனம் திறந்த நளினி!

தமிழ் சினிமாவில், 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கி, தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது நடிப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நளினி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பல சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
அதன் விவரம் கீழே வருமாறு:
சாலிகிராமத்தில் எங்களது வீடும், விஜய் வீடும் பக்கம் பக்கமாகத்தான் உள்ளது. எனது கணவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த நாட்களில், எந்த நேரமும் எங்கள் வீட்டின் முன், ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். கைகளில் ராமராஜன் என பச்சை குத்திக் கொண்டு, ரசிகர்கள், எனது கணவரை பார்க்க வருவார்கள். அந்த கூட்டத்தைப் பார்த்து, பார்த்துத்தான், விஜய்க்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையே வந்துள்ளது.
இதை அவரது குடும்பத்தினர் பலமுறை சொல்வார்கள். ஆனால், நான் நடிகையாக இருந்தாலும், எனக்கு சினிமா மேல அவ்ளோ ஆர்வம் கிடையாது. எனது அம்மாவின் வற்புறுத்தல் காரணமாகவே, சினிமாவில் நடிக்க வந்தேன். 1983ல் என்னை கட்டாயப்படுத்தி சிரஞ்சீவியுடன் என் அம்மா நடிக்க வைத்தார். அப்போது என்னால் மறுக்க முடியவில்லை.
ஆனால், இப்போது, நடிக்காமல் இருக்க முடியவில்லை. தனிப்பட்ட சந்தோஷத்திற்காக நடிக்கிறேன். எனது கணவர் கூட என்னை பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி வருத்தப்படுவது உண்டு. இனிமேல் நடிச்சி என்ன சம்பாதிக்க இருக்கு, என்றுகூட அவர் கேட்டிருக்கிறார். ஆனால், எனக்கு வருமானத்தை விட, தனிப்பட்ட மகிழ்ச்சி. அவ்ளோதான். அதுவும், அதிகமாக நடிப்பதில்லை.
தேர்வு செய்யப்பட்ட புராஜெக்ட்களில்தான் நடிக்கிறேன். மற்ற நேரங்களில், எனது குழந்தைகளை செட்டில் செய்துவிட்டேன். அவர்களுக்கும் திருமணமாகி, பேரக்குழந்தைகள் உள்ளார்கள். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடவே இப்போதெல்லாம் ஆசைப்படுகிறேன். இதற்காகவே, அடிக்கடி சென்னை, டெல்லி என சென்று, குடும்பத்தினருடன் தங்கியிருந்துவிட்டு வருகிறேன்.
அதனால்தான், சமீப நாட்களாக, அதிகமாக நடிப்பதில்லை. ஆனால், எனது கணவரோ , நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறி, இன்னும் புதிய வாய்ப்பிற்காக, காத்திருக்கிறார். அது அவரது விருப்பம். இவ்வாறு நளினி தெரிவித்துள்ளார்.