விக்ரம் மகன் துருவின் வர்மாவில் இருந்து பாலா அதிரடி நீக்கம்! படமும் வெளியாகாது!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த வர்மா படம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.


தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் தெலுங்கு திரையுலகயே புரட்டி போட்டது. மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது.

 

அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் தனது மகன் துருவை வைத்து ரீமேக் செய்ய விக்ரம் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனமே தமிழிலும் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டது.

 

விக்ரமின் வேண்டுகோளை ஏற்று இயக்குனர் பாலா அர்ஜூன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கிய நிலையில் ஆறு மாதங்களில் சூட்டிங் முடிந்தது. படமும் வெளியீட்டிற்கு தயாரானது.

 

இந்த நிலையில் வர்மா என பெயர் சூட்டப்பட்டு டீசர், டிரெய்லர் வெளியிடப்பட்டு பிப்ரவரி 14ந் தேதி காதலன் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாலாவின் பி ஸ்டூடியோ நிறுவனம் பர்ஸ்ட் காப்பி என்ற ஒப்பந்த அடிப்படையில் வர்மா படத்தை எடுத்துக் கொடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி பதிப்பை பார்த்த போது தங்களுக்கு திருப்தியாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

 

தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தில் இருந்த ஆழமான காட்சி அமைப்புகளும், எதிர்பார்த்த விஷயங்களும் வர்மாவில் இல்லை என்றும் இ4 தெரிவித்துள்ளது. எனவே அர்ஜூன் ரெட்டியை முதலில் இருந்து தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், இதற்காக புதிய இயக்குனரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இ4 கூறியுள்ளது.

 

விக்ரமின் மகன் துருவ் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் என்றும் அதே சமயம் படத்தின் கதாநாயகி மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் மாற்றப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இ4 கூறியுள்ளது.

 

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவை நீக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து மீண்டும் படத்தை இயக்க உள்ளதாக இ4 நிறுவனம் அறிவித்துள்ளது தமிழ் திரையுலகையே அதிர வைத்துள்ளது. அந்த நிறுவனம் இந்த முடிவை எடுக்க முழுக்காரணம்,

 

படத்தில் அர்ஜூன் ரெட்டியின் தாக்கம் இல்லை என்றும், படத்தின் நேரம் மிக மிக குறைவாக இருந்தது என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக கதாநாயகியின் நடிப்பு சரியில்லை என்றும் கூறப்படுகிறது.

 

எனவே படத்தை அரைகுறையாக வெளியிட்டு தோல்வி அடைய விரும்பாத காரணத்தினால் புதிதாக முதலில் இருந்து படப்பிடிப்பை நடத்த இ4 முடிவு செய்துள்ளது. இதனால் இயக்குனர் பாலாவுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.