குடியுரிமை சட்டத்துக்கு நடிகர் ராஜ்கிரண் என்ன சொல்கிறார்? இஸ்லாமியர் எல்லோரும் ஒரு காலத்தி இந்துக்கள்தான் என்கிறார்.

திரைப்பட நடிகர் ராஜ்கிரணைப் பற்றி பலருக்கும் நடிகராகத்தான் தெரியும். ஆனால், அவர் தீவிரமான மனிதாபிமானி.


இப்போது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அவர் என்ன கருத்து சொல்லியிருக்கிறார் தெரியுமா?

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப்போன விசயம். இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான்தான் அவர்களது நாடு என்பது போலவும், பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான,நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.

இந்த பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்து விடமுடியாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள். இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற, இன்ன பிற கொடுமைகளால், அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து, சுய மரியாதையைப்பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழி வகுத்துத்தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள்...

ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது, அவனவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்" உறுதி செய்திருக்கிறது. ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா, அதே போலத்தான் இதுவும்...

எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே. என் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மறவர் குலம். என் தாயாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மீனவர் குலம். எனது மூதாதையர் காலத்தில்,

சேதுபதிச்சீமையில், பள்ளு, பறை என்று 18 சாதிகள் இருந்தனவென்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி,சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக்கொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்...

அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு. பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு என்று கூறியிருக்கிறார்.