துப்பாக்கி ஏந்தவும் தயார்: தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் கார்த்திக் திடுக்!

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்தி போராடவும் தயாராக உள்ளேன் என்று, நடிகர் கார்த்திக் பரபரப்பாகப் பேசியுள்ளார்.


தமிழகத்தில் வரும் 18ம் தேதியன்று, மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தனது பிரசாரத்தின் இடையே , இந்திய நாட்டை பாதுகாக்க, எல்லைக்குச் சென்று, துப்பாக்கி ஏந்தி போராடவும் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சிறு வயதில், போர் விமானியாக ஆசைப்பட்டதாகவும், எதிர்பாராவிதமாக, நடிக்க நேரிட்டதாகவும் அவர் கூறினார். அதிமுக கூட்டணிக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு நிலவுவதால், சரியான கட்சிக்கு வாக்கு சேகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கார்த்திக் குறிப்பிட்டார்.