கஜா புயல்! சத்தம் இல்லாமல் அஜித் செய்த உதவி! ஆனந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கஜா புயல் நிவாரணத்திற்கு யாருக்கும் தெரியாமல் நடிகர் அஜித் செய்த உதவி தற்போது தெரியவந்துள்ளது.


   கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை சின்னா பின்னமாக்கி பத்து நாட்கள் ஆகிறது. நிவாரணப் பணிகளுக்கு பொதுமக்கள் தாரளமாக நிதி உதவி தர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து தொழில் அதிபர்களும், திரையுலகினரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கி வருகின்றனர்.

   தமிழ் திரையுலகில் இருந்து முதல் ஆளாக நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.25 லட்சம் நிதி உதவி அறிவித்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு நடிகர்களும் உதவிகளை அளித்து வருகின்றனர். நடிகர் விஜய் கூட தனது ரசிகர் மன்ற தலைவர்களுக்கு தனது சொந்த பணத்தை அனுப்பி வைத்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு கூறியுள்ளார். ரஜினியும் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பணிகளை தனது ரசிகர் மன்றம் மூலமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.

   ஆனால் நடிகர் அஜித் மட்டும் கஜா புயலுக்கு நிவாரண நிதி அறிவிக்காமல் இருந்து வந்தார். இதனால் அஜித் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். மேலும் கஜா புயல் இங்கு மக்களை பாடாய் படுத்தியுள்ள நிலையில் அஜித் கோவாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அஜித் தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

   எந்த உதவி செய்தாலும் யாரிடமும் சொல்லாமல் செய்வது அஜித்தின் பழக்கம். அந்த வகையில் இங்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்த விளம்பரமும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையே அஜித் அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவலை அஜித் தரப்பில் இருந்து யாரும் வெளியிடவில்லை. ஆனால் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளது.

   செய்த உதவியை சொல்லிக்காட்டாமல் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை அஜித் உறுதிப்படுத்தியுள்ளார்.