ஆஸ்கர் விருது வென்ற சிறந்த நடிகர் ஜாக்குயின் ஃப்னீக்ஸ்..! நெஞ்சை தொடும் அற்புத பேச்சு

உலகிலேயே மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பாரசைட் படம் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு கேட்டகரியில் வெற்றி பெற்றுள்ளது.


அதேபோன்று ஜோக்கர் படமும் நிறைய விருதுகளை அள்ளியிருக்கின்றன. சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ஜாக்குயின் ஃபீனிக்ஸ் விருது வாங்கியவுடன் பேசியதுதான் நெஞ்சை தொடுவதாக அமைந்திருக்கிறது. மனித சமுதாயத்தின் மீது அன்பு கொள்ளும் வகையில் பேசியிருக்கிறார் ஜாக்குயின்.

இவர் ஏற்கெனவே இரண்டு முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், இப்போதுதான் முதன்முறையாக வெற்றியைத் தொட்டுள்ளார். அடக்கமுடியாமல் சிரிக்கும் ஒரு நோயாளியாக ஜோக்கரை காட்டி வெற்றி அடைந்திருக்கிறார் ஃபீனிக்ஸ்.

அவரது பேச்சில், ‘‘இந்த விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது பெற்றதால், இந்த அரங்கில் இருக்கும் யாரையும் விட நான் உயர்ந்துவிடவில்லை. இங்கு இருக்கும் நாம் அனைவரும் சமமானவர்கள். நமக்குள் இருக்கும் ஒற்றுமை என்பது சினிமாவின் மீது நாம் கொண்டுள்ள காதல். இந்த இடத்திற்கு வெளியில் இருக்கும் பலரிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது. அது நம் குரல். அந்தக் குரலை குரல் இல்லாதவர்களுக்காக நாம் பயன்படுத்த வேண்டும். 

நான் இன பேதம் குறித்துப் பேசுகிறேன். நாம் சந்தித்துள்ள மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. மனிதர்களான நாம் விலங்குகளையோ, பறவைகளையோ அல்லது ஏதோவொரு உயிரினத்துக்கு சம உரிமை கேட்கவில்லை. மனிதர்கள் மனிதர்களுக்காக சம உரிமை கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். நாம் இப்போது இதைப் பேசியே ஆகவேண்டும்.’’ என்று கூறியுள்ளார். ஆஸ்கர் மேடையை தன்னுடைய உரிமைக் குரலுக்காக உயர்த்தியிருக்கிறார் ஜாக்குயின்.