ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி முகிலன் கடத்தல்? பதற்றத்தில் சக போராளிகள்!

நாளை ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சமூக செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலனை காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுக்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில், கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது? , ஐ.ஜி., டி.ஐ.ஜி.எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன? என்பதை அம்பலப்படுத்தும் காணொளி காட்சிகளை முகிலன் வெளியிட்டார். 

இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அவர் பதிவிட்டார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு மதுரை செல்லும் விரைவு ரயிலில் செல்ல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால அதன் பிறகு இரவு 12 மணிக்கு முதல் முகிலனை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறி தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் லயோலா மணி  என்பவர் சென்னை எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

நாளை ஸ்டெர்லைட் தீர்ப்பு வர உள்ள நிலையில் முகிலன் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கடைசியாக ரயிலில் சென்ற எழும்பூர் ரயில் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.  மேலும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆட்கொணர்வு மனுவும் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

தொடர்ச்சியாக ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடி வரும் முகிலன் கடந்த ஆண்டு தொடர்ந்து பல மாதங்களாக சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் அவர் மாயமாகியுள்ளார். அவரை சிலர் கடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.