முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலிச் செல்லப்பனார் காலமானார்!

சிலம்பொலி செல்லப்பனார் - 90 அகவை கடந்துள்ள இவர் ஆற்றியுள்ள அளப்பரிய, ஈடிணையற்ற, வியக்கவைக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க, மிகப்பெரும் சாதனைகளுள் சில மட்டும் தங்கள் பார்வைக்கு:


தமிழ்கூறு நல்லுலகில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, இனியும் யாரும் நிகழ்த்த இயலாத இமாலயச் சாதனைகள் இவை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகள் வழங்கியுள்ளது. 65 ஆண்டுகளாகப் பட்டிதொட்டிமுதல் பன்னாட்டு அரங்குகள்வரை 15000 க்கும் மேற்பட்ட இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளது. ஒவ்வொன்றும் ஓர் ஆண்டுக்கும்மேல் நீடித்த , 25 க்கும் மேற்பட்ட இலக்கியத் தொடர்சொற்பொழிவுகள் நிகழ்த்தியது.

12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, கைப்பணம் ரூ.12 லட்சம் செலவழித்து 6000 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ' செம்மொழித் தமிழ் அகப்பொருள் களஞ்சியம்' எனும் 14 தொகுதிகளைக் கொண்ட சங்க இலக்கிய நூலைத் தமிழன்னைக்குப் படைத்தது.

 40 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்கள், 200 க்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகள் எழுதியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத் தமிழ் மாநாடுகளிலும் மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரித்துப் பெரும் பாராட்டுப் பெற்றது.

"சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை" நிறுவி ஒவ்வோராண்டும் சிலப்பதிகாரப் பெருவிழாவைச் சிறப்பாக நடத்திவருவதோடு, தமிழ் அறிஞர்களுக்கு இளங்கோ விருதும் பொற்கிழியும், மாணவர்கட்கு ' இளைய சிலம்பொலி' விருதும் பொற்கிழியும் அளித்து வருவதுடன் 65 ஆண்டுகளாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிவருவது. கலைஞர், ம.பொ.சி., டாக்டர் கா.செல்லப்பன், முதுமுனைவர் இளங்குமரனார், பெரியவர் காளியண்ண கவுண்டர் ஆகியோர் இவரது அறக்கட்டளை சார்பில் இளங்கோ விருது பெற்ற சான்றோர்கள் ஆவர்.

தமிழக அரசில் மிக உயர் பதவிகள் வகித்த இவருக்குச் சொந்த வீடோ, வாகனமோ, பிற சொத்துகளோ எதுவும் இல்லை என்பது பெருவியப்பு.

தமிழே பேச்சாக, தமிழே மூச்சாகத் தமிழ்த் தொண்டாற்றிய இவர் ஆத்மா சாந்தி அடைய வணங்குவோம்...