அசுர வேகத்தில் வந்த லாரி! அலட்சியமாக ரோட்டை கிராஸ் செய்த பைக்! நொடியில் நேர்ந்த பதை பதைக்க வைத்த சம்பவம்!

தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறல். இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயம்.


தமிழகத்தில் நாள்தோறும் விபத்து, விபத்தால் மரணம் என்பதெல்லாம் ஒரு காலத்தில் புதிய செய்தியாகவும் தலைப்பு செய்தியாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த பேதமும் இன்றி அனைத்து தரப்பினரும் சாலை விதிகள் மீறுவதால் எற்படும் விபத்துகளும், மரண செய்திகளும் சர்வ சாதாரணமாகி விட்டது.

சுமார் 1.5 கோடி மக்கள் வாழும் சென்னையில் வாகனங்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து சுமார் 50 லட்சம் என உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. தான் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக அதி வேகமாக வாகனத்தை ஓட்டுவதும் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

சென்னை புழல் சிறைச்சாலை வடமாநில பதிவெண் கொண்ட சரக்கு லாரி ஒன்று சென்னையை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது. லாரி வருவதை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் லாரியின் குறுக்கே திடீரென சென்றனர். இதை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் பிரேக் பிடிக்க முடியாமல் இரு சக்கர வாகனம் மீது மோதினார்.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  இதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் கணபதி தோட்டம் பொன்னியம்மன் மேட்டை சேர்ந்த கணேச சாமி மற்றும் அகரம் பகுதியை சேர்ந்த ராசு என்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து போலிசார் தெரிவித்த போது இளைஞர்கள் நாளுக்கு நாள் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுவதால் இது போன்று விபத்தில் சிக்குவதாகவும் தங்களது எதிர்காலத்தையும் குடும்பத்தையும் சிறிது நேரம் மனதில் வைத்து வாகனத்தை ஒட்டினால் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மீது லாரியை மோதிய ஓட்டுநர் தன் மீது தவறு இல்லை என்றாலும் சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை இருப்பதால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து போலிசாரின் விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்