6 வருசம் தவம் இருந்து பெத்த பிள்ளை சுபஸ்ரீ! நடந்த துயரத்தை நினைத்து நினைத்து துடிக்கும் பாட்டி ஜானகி!

சுபஸ்ரீ தன்னுடன் பாசமாக இருந்த நினைவுகளை அவருடைய பாட்டி ஊடகத்திற்கு அளித்த பேட்டியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் ரேடியன் சாலையில் அமைந்துள்ள மண்டபத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. இங்கு இருசக்கர வாகனத்தில் பி.டெக் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி சென்று கொண்டிருந்தார்.

சாலையோரத்தில் அமைந்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள பலரையும் 2 நாட்களாக பெரிதளவில் பாதித்துள்ளது. 

சுபஸ்ரீ தன்னுடன் எவ்வளவு பாசமாக இருப்பாள் என்று அவளுடைய பாட்டி கூறியிருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. "தவமாய் தவமிருந்து 6 வருடங்களுக்கு பின்னர் பிறந்த குழந்தை சுபஸ்ரீ. அவள் மீது அதிகளவில் நான்தான் பாசத்தைப் பொழிந்தேன். வீட்டை விட்டு வெளியேறும் போது என்னிடம் கூறிவிட்டு தான் போவாள். வீட்டிற்கு வந்தவுடன் முதலாக என்னை தான் பார்ப்பாள்.

அவருக்கு என் மீது அளவுகடந்த பிரியம் இருந்தது. தன்னுடைய செல்போன், லேப்டாப் ஆகிய அனைத்துக்கும் என்னுடைய பெயரையே கடவுச்சொல்லாக வைத்திருப்பார். என்னை "ஜானு" என்று மிகவும் நெருக்கமாக அழைப்பாள். சமீபத்தில் அவள் கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தாள்.

அப்போது என்னிடம் நீயும் புறப்படுவதற்கு தயாராக இரு என்று கூறினாள். என்னால் ஏரோபிளேன் ஏற முடியாது என்று கூறியதற்கு கப்பல்லயாவது உன்னை அழைத்துச் செல்வேன் என்று கூறினாள். என்னுடைய இறுதி சடங்கை செய்து முடிப்பார் என்று நினைத்த என்னை இளம் வயதிலேயே பிரிந்து சென்றுள்ளார்" என்று அழுதபடி பேட்டியளித்தார்.

இந்த பேட்டியானது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.