ஆம் ஆத்மியின் வெற்றி என்பது சாமானிய வெற்றியா அல்லது சரித்திர வெற்றியா?!

தில்லியில் தலைகீழாக நின்றும் ஏன் பா.ஜ.க.வால் வெற்றிபெற முடியவில்லை என்பதற்கு தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பற்பல சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி,கட்சித் தாவல்களை ஊக்குவித்து அறத்திற்கு புறம்பான அராஜக முறையில் ஆட்சி கட்டிலை அபகரிக்க முடிந்த பாஜகவால் தில்லியில் மட்டும் ஆம் ஆத்மியை அசைக்க முடியவில்லை!  ஒரு மாநில அந்தஸ்த்து கூட இல்லாத தில்லி அரசாங்கத்திற்கு - போலீஸ் மீது கூட ஆளுமை செலுத்த முடியாத குறைவான அதிகாரம் படைத்த அரசுக்கு - பாஜக கொடுத்த தலைவலிகள் கொஞ்சனஞ்சமல்ல!

ஆளுனரை கொண்டு இடையூறு! மத்திய அமைச்சர்களைக் கொண்டு இடையூறு! கெஜ்ரிவாலுக்கு தீவிரவாதி என்ற முத்திரை...கோமாளி என்ற குதர்க்கப் பேச்சு. நிர்வாகம் தெரியாதவர்கள் என்ற கிண்டல்...அத்தனைக்கும் கெஜ்ரிவாலின் செயல்பாடுகளைக் கொண்டே மக்கள் தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள்!

அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் உள்ளார்ந்த ஈடுபாடு! மொகல் மருத்துவமனை என்ற பெயரில் தில்லியில் 450 கட்டணமில்லா ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவி மருத்துவ சேவையை சாத்தியப்படுத்தியதும்குடி நீர் ,மின்சாரம் ஆகியவற்றை முறைப்படுத்தி தட்டுப்பாடில்லாமலும்,தடையில்லாமலும் வழங்கியது...

அனைத்துக்கும் மேலாக ஊழற்ற சிறந்த நிர்வாகத்தை தருவதற்கு உளப்பூர்வமாகவே செயல்பட்டார் கெஜ்ரிவால்! குறிப்பாக, நடைபாதை வியாபாரிகளிடம் மாமுல் வசூலித்து வந்த போலீசாரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது எளிய மக்களிடம் அவருக்கு அபரிதமான செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளது. மேலும், தில்லியில் மூஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர் என்ப்தால், அவர் தன்னை சிறுபானமையினரின் பாதுகாவலனாக சீன் போட முயலவில்லை!

அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை தெளிவாக உணர்த்திவிட்டார்! அதுவே போதுமானதாகிவிட்டது. பாஜக வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறது என்று அடிக்கடி ஒயாமல் சொல்லிச் சொல்லி வருவதன் மூலம் - சொல்லப்படுவது உண்மையே என்றாலும் கூட - பாசிடிவ்வான ஒரு மாற்றை செய்யாமல் வெறுமனே சொற்போர் தொடுப்பதன் மூலம் - பாஜகவின் மீதான ஒரு வெறுப்பு அரசியலை ராகுல்காந்தி கட்டமைக்கிறரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது!

ஆனால்,கெஜ்ரிவால் யார் மீதும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை. குடியுரிமை மசோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த போராட்டத்தையும் ஆம் ஆத்மி நடத்தவில்லை! ஆனால்,அந்தவித போராட்டங்கள் நடந்த சாகின்பார்க் தொகுதியில் ஆம் ஆத்மியின் முஸ்லீம் வேட்பாளர் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்!

ஆக,ஆம் ஆத்மியின் வெற்றி என்பது ஆரோக்கிய அரசியலுக்கு கிடைத்த வெற்றி! நேர்மையான நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி! அதே சமயம் ஆம் ஆத்மியும் சராசரி ஓட்டு கட்சிகளைப் போல நிறைய இலவச திட்டங்களை அறிவித்து,ஓட்டு வேட்டையாடியிருப்பதும் கவலையளிக்கிறது... என்று தெரிவித்திருக்கிறார்.