தஞ்சையில் விபத்தில் தாயை பிரிந்த குடும்பத்தினர் தங்கள் துயரத்தையும் பொறுத்துக்கொண்டு ஆற்றிய மனித நேயம் மிக்க செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
தஞ்சையில் மனிதநேயம்! தன் உயிரை கொடுத்து 7 பேர் உயிரை காப்பாற்றிய தாய்!
தஞ்சை சீனிவாசபுரத்தைச்
சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி அமுதா. 56 வயதான இவர் கடந்த 11-ஆம் தேதி மாலை
ஒரத்தநாடு அருகே தன் மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது
நேர்ந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சுயநினைவை இழந்த
இருவரும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 13-ஆம் தேதி
அமுதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இந்நிலையில் அமுதாவின்
உறவினர்கள் அளித்த ஒப்புதலின் பேரில் மீனாட்சி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக்
குழுவினர் அமுதாவின் இதயம், நுரையீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் மற்றும்
கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எடுத்தனர்.
அவற்றில் ஒரு
சிறுநீரகம் மீனாட்சி மருத்துவமனையில் உள்ள மற்றொரு நோயாளிக்கு மாற்றி
பொருத்தப்பட்டது. மற்ற பாகங்கள் திருச்சி, சென்னை, மதுரையில் உள்ள பிற
மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்துக் கூறிய
அமுதாவின் உறவினரான வினோத்குமார், தனது பெரியம்மாவான அமுதாவின் இழப்பால் தங்கள்
குடும்பத்தினர் கடும் துயரத்தில் இருப்பதாகவும், விபத்தில் படுகாயம் அடைந்த தனது
அண்ணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர் பேசத்
தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இறந்துபோன தனது
பெரியம்மாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெறுவார்கள்
என்பதால் அதற்கு தங்கள் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்தார். நம்
அன்புக்குரியவர்களை நாம் துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டாலும் மற்றவர்களின்
அன்புக்குரியவர்களை காப்பாற்ற வாய்ப்பிருந்தால் அவர்கள் மூலம் நம்
அன்புக்குரியவர்களும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்ற அவர், அனைவருக்கும் இதுபோன்ற
உணர்வு தோன்ற வேண்டும் என்றார்.