30 ஆண்டுகளாக வெறும் டீ மட்டும் தான்! உணவே இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்!

குளிர்கால பொழுதுகளில் சூடாக ஒரு கப் டீ குடிப்பது, உடலுக்கு புத்துணர்வு அளிக்கும், ஆனால், அதையே முழு நேர உணவாக வைத்து உங்களால் உயிர் வாழ முடியுமா? முடியும் என்கிறார் இந்த பெண்.


ஆம். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் 30 ஆண்டுகளாக, வெறும் டீ மட்டுமே குடித்து, ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்து வருகிறார். கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பில்லி தேவி என்ற பெண்தான் இப்படி டீ குடிச்சே உயிர் வாழ்பவர். கிட்டத்தட்ட அவரது 11 வயதில் இருந்து, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி முழு நேரமும் அவர் டீ மட்டும்தான் குடிக்கிறாராம். அதனால், அப்பகுதி மக்கள் பலரும் பில்லி தேவியை, ‘’சாயா குடிக்கும் சேச்சி’’ என அழைக்கின்றனர். 

இதுபற்றி பில்லி தேவியின் தந்தை ரதி ராம் (44 வயது) கூறுகையில், ‘’என் மகள் கோரியாவில் உள்ள ஜானக்பூரில் செயல்படும் பாட்னா ஸ்கூலில் 6வது படித்தாள். அப்போது, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றாள். அதன்பின், வீடு திரும்பிய அவள், திட ஆகாரம் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டாள். தாகம் எடுத்தால், தண்ணீர் கூட அவள் குடிப்பதில்லை. டீ மட்டும்தான் குடித்து வருகிறாள்,’’ என்று ஆச்சரியம் நீங்காமல் கூறுகிறார். 

மேலும், அவர் கூறும்போது, ‘’ஆரம்ப நாட்களில், பால் கலந்த டீயுடன், பிஸ்கட், பிரெட் போன்றவற்றையும் சாப்பிட்டு வந்த பில்லி தேவி, நாளாக நாளாக அதையும் நிறுத்திவிட்டாள். படிப்படியாக, பிளாக் டீ  மட்டும் குடிக்க ஆரம்பித்தாள். நாள் முழுவதும் டீ குடித்த அவள், அதையும் நிறுத்தி, சூரிய உதயத்திற்கு பின் ஒருவேளை மட்டுமே பிளாக் டீ குடித்துவருகிறாள்,’’என்று குறிப்பிட்டார். 

இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ந்து போன பில்லி தேவியின் குடும்பத்தினர், அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். ஆனால், பில்லி தேவியை நன்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு என்ன நோய், 
உடலில் என்ன பாதிப்பு என்று எதையும் கண்டுபிடிக்க முடியாமல், குழம்பி
போய் விட்டார்களாம். 

இதுகுறித்து பில்லி தேவியின் சகோதரர் பிஹாரி லால் ராஜ்வடே கூறுகையில், ‘’அவளை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காட்டினோம். ஆனால், அவளின் நடத்தை பற்றிய காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்களும், அதற்கு மேல் எதுவும் செய்யாமல் அவளை அப்படியே விட்டுவிட்டோம்,’’ என்கிறார். 

இதேபோல, மற்ற உறவினர்கள் கூறும்போது, பில்லி தேவி வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வம் என்றும், அவர் நாள் முழுவதும் சிவபெருமானை எண்ணி, பிரார்த்தனையில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பாக, கோரியா மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் எஸ்.கே.குப்தாவிடம் கேட்டபோது, வெறும் டீ மட்டும் குடித்து ஒருவர் உயிர்வாழ்வது கடினம், எனக் கூறினார். நவராத்திரி விரதம் இருக்கவே பலரால் முடியாத சூழலில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒருவர் டீ மட்டுமே குடித்து உயிர் வாழ்வது, அறிவியல் ரீதியாக, நம்ப முடியாத விசயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.