இந்தோனேஷியாவில் செல்ஃபோனின் பாஸ்வேர்டை தர மறுத்த கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
செல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!

இந்தோனேஷியாவின் மேற்கு நுசா டெங்காரா மாகாணத்துக்குட்பட்ட கிழக்கு லாம்பாக் பகுதியைச் சேர்ந்தவர் டெபி பூர்ணமா. 26 வயதான இவர் தங்கள் வீட்டின் மேற்கூரையில் இருந்த பழுதை சரி செய்துகொண்டிருந்தார்.
அப்போது அவரது மனைவியான 25 வயது இல்ஹாம் சயானி பூர்ணமாவின் செல்ஃபோனை பயன்படுத்த அதன் கடவுக் குறியீட்டைக் கேட்க அதை பூர்ணமா சொல்ல மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலிருந்து இறங்கிவந்த பூர்ணமா கோபத்துடன் சயானியை அறைந்தார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற சயானி சற்றும் எதிர்பாராத வகையில் வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து பெட்ரோலை பூர்ணமா மீது உற்றி உடனடியாக லைட்டரால் பற்ற வைத்தார்.
இதனால் உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் வெந்து துடித்த பூர்ணமா, வீடு முழுவதும் அங்கும் இங்கும் ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உடல் முழுதும் வெந்துபோன நிலையில் அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூர்ணமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்குப் பிறகு பூர்ணமா உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சயானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.