தலை நிறைய மல்லிகைப் பூ..! கழுத்து நிறைய நகை..! ரயிலில் பிறந்த வீட்டுக்கு தனியாக சென்ற புதுப் பெண்ணுக்கு நேர்ந்தது என்ன?

தஞ்சையில் இருந்து நெல்லைக்கு அதிக நகைகளை அணிந்து கொண்டு ரயிலில் சென்ற பெண் மாயமாகிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டம் நரையப்பபுரத்தை சேர்ந்த தங்கம் என்பவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் தஞ்சையில் முகவராக உள்ளார். தாய்வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் தனியாக சென்னை- கன்னியாகுமரி அந்தியோதா ரெயிலில் தங்கம் பயணித்துள்ளார்.

மதுரை வரை தன் தாயிடம் செல்போனில் பேசிய அவர் அதற்கு பின்னர் தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இதனால் பயந்து போன அவரது தாய் பூசைக்கனி தன்னுடைய மகன் திருமலை மூலம் ரயில்வே போலீசிடம் புகார் அளிக்குமாறு கூறினார். ஆனால் நெல்லை போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

தங்கம் நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் ரயிலில் சென்றிருக்கலாம் என்பதால் அங்கே சென்று புகார் தருமாறு ரயில்வே போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து தென்காசியிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் தங்க நகைகளுடன் மாயமான தங்கத்தை வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நகைகள் அதிகமாக அணிந்து கொண்டு வந்ததால் மர்மநபர்கள் யாரேனும் அவரை நகைக்காக கடத்தி சென்றனரா? அவராகவே வேறு எங்கும் சென்றாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.