தொழில் அதிபர் திடீர் மரணம்! பாஸ்வேர்டை கூறிச் செல்லாததால் ரூ.1000 கோடி அம்போ!

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனர் திடீரென மரணமடைந்ததால், அவருக்குச் சொந்தமான ரூ.1000 கோடி மதிப்புடைய பணத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது சற்று வேடிக்கையான கதை. தொடர்ந்து படியுங்கள். கனடாவைச் சேர்ந்தவர் ஜெரால்ட் காட்டன். இவர்தான், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் சேவைக்கான குவாட்ரிகா சிஎக்ஸ் என்பதை நிறுவியவர்.

 

இதன்மூலமாக, பிட்காயின் எனப்படும் அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை உலக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த கரன்சி பரிவர்த்தனை வாரியம், டிஜிட்டல் வர்த்தகம் மூலமாக, பலரும் பணம் அல்லது கிரிப்டோகரன்சியை முதலீடு செய்வதை ஊக்குவித்து வருகிறது.

 

இந்த முதலீடுகளை டிஜிட்டல் நாணயங்களாக மாற்றி, அவற்றுக்கென பிரத்யேக பாஸ்வேர்ட் ஏற்படுத்தி, அதன்மூலமாக, உலக அளவில் பணத்தை பாதுகாப்பாக நிர்வகித்து வருவதுதான், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சின் வேலையாகும்.

 

இதில், உலகம் முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரம் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்களில், இன்னும் 92,000 பேருக்கு முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை.

 

இந்நிலையில், கடந்த டிசம்பர் 9, 2018 அன்று ஜெரால்ட் காட்டன் இந்தியா வந்திருந்தபோது, ஜெய்ப்பூரில் உயிரிழந்துவிட்டார். 30 வயதான காட்டனுக்கு, மனைவி மட்டுமே உள்ளார். குழந்தைகள் யாருமில்லை.  

 

சாகும் முன்பாக, கடந்த நவம்பர் 27, 2018 அன்று, ஜெரால்ட் காட்டன், தனது சொத்துகளை மதிப்பிட்டு அதற்கான உயிலை வக்கீல் மூலமாக எழுதியுள்ளார். அதில், சொத்துகள் அனைத்தையும், தனது மனைவி ஜென்னிஃபர் ராபர்ட்சன் பெயரில் அவர் எழுதி வைத்துள்ளார்.

 

இவருக்குச் சொந்தமாக, பல்வேறு அசையா சொத்துகளும், டிஜிட்டல் கரன்சிகளும் உள்ளன. இதெல்லாம் பிரச்னை இல்ல. பிரச்னை என்னவெனில், காட்டனின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் வழியாக நடைபெறுபவை. பிட்காயின், லைட்காயின், எதர் உள்ளிட்ட டிஜிட்டல் நாணயங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

 

அவற்றின் மூலமாகவே, காட்டனின் பரிவர்த்தனைகள் நடைபெறும்அவரது நிறுவனத்தின் செயல்பாடுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். இவை அனைத்தையும் காட்டன் மட்டுமே தனியாளாக நிர்வகித்து வந்துள்ளார். பாதுகாப்பு காரணங்களால், பாஸ்வேர்ட், இமெயில் முகவரிகள் உள்பட அனைத்தையும் அவர் ரகசியமாக வைத்து வந்திருக்கிறார்.

  

வங்கியில் இருந்து பணம் எடுப்பதையும் அவர் மட்டுமே தனியாளாக செய்து வந்துள்ளார்தற்போதைய நிலையில், காட்டனின் சொத்தாக, ரூ.1000 கோடி வரையிலும், அவரது வாடிக்கையாளர்களுக்குச் சேர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பணமும் டிஜிட்டல் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.

 

பாஸ்வேர்ட் உள்பட அனைத்து விவரங்களும் தெரிந்தால் மட்டுமே, இவற்றை வெளியில் எடுக்க முடியும். காட்டனின் முதலீட்டாளர்கள், அவரது நிறுவனம் மற்றும் அவரது மனைவி என அனைவரும், கையறு நிலையில் தற்போது உள்ளனர். 

இந்த பிரச்னையை சமாளிக்க, கனடா அரசின் உதவியை அவர்கள் கோரியுள்ளனர்.