லெஸ்பியன் காதல்! சென்னை பெண் போலீசுடன் குடும்பம் நடத்தும் கோவை மாணவி!

லெஸ்பியன் காதல் வயப்பட்ட பெண் போலீசும் – கோவை கல்லூரி மாணவியும் சென்னையில் ஒன்றாக குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் உள்ள ஜி.சி.டி பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருபவர் மதுபாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மதுபாலா திடீரென விடுதியில் இருந்து மாயமாகியுள்ளார்.

பெற்றோர் பல இடத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மதுபாலாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது மதுபாலா சென்னையில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் கூறிய இடத்திற்கு சென்ற மதுபாலாவின் பெற்றோர் பார்த்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் தங்கள் மகள் மதுபாலா அங்குள்ள பெண்மணி ஒருவருடன் சேர்ந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக அழுது புரண்டு தங்களுடன் வருமாறு மகளை பெற்றோர் அழைத்துப் பார்த்தனர். ஆனால் மதுபாலா வர மறுத்துவிட்டார். மேலும் பெண்மணி உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் தான் தொடர்ந்து வாழப்போவதாக மதுபாலா கூறியுள்ளார்.

மேலும் ஓரினச்சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் தங்களை பிரிக்க முடியாது என்று மதுபாலா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதுபாலாவின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாருக்கு ஆளான பெண்ணான உஷாவை அழைத்து விசாரித்த போது போலீசார் அதிர்ந்து போயினர். காரணம் உஷா ஜே.ஜே நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் என்பது தெரியவந்தது.

ஆன்லைன் மூலம் அறிமுகமான மதுபாலாவும் – உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். பின்னர் சென்னை அண்ணா நகரில் வீடு எடுத்து தங்கி தற்போது குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

உயர் அதிகாரிகள் விசாரணையின் போது உஷா தானும் மதுபாலாவும் காதலிப்பதாகவும் ஒன்றாக வசிப்பதாகவும் இதற்கு சட்டத்தில் தடை இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் போலீசாரின் விதிமுறைகளின் படி ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து கல்லூரி மாணவி மதுபாலாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த உயர் அதிகாரிகள், பெண் காவலர் உஷாவுக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மதுபாலா தனது பெற்றோருடன் செல்ல முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மதுபாலாவின் பெற்றோர் காவல் நிலையம் முன்பே கதறி அழுதனர்.