ஷாப்பிங் மாலுக்குள் புகுந்து கம்பீர பவனி வந்த சிறுத்தை! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

தானேயை வாசிகளை 6 மணி நேரம் கலங்கடித்த சிறுத்தை வணிக வளாகத்திலும், ஓட்டலின் தரைக் கீழ் தளத்திலும் கம்பீர பவனி வந்தது.


மகாராஷ்டிர மாநிலம் தானேயின் சம்தா நகரில் பிரபல வணிக வளாகமான கோரம் மால் உள்ளது. அதன் பார்க்கிங் பகுதிக்கு அதிகாலை நேரத்தில் சென்ற சிலர் ஒரு வித்தியாசமான விருந்தாளியை சந்திக்க நேர்ந்தது. சிறுத்தை அண்ணா தான் அவர்.

 

பீதி பாதியும், பதற்றம் மீதியுமாய் அலறியடித்து ஓடிய அவர்கள் செல்ஃபோன்களில் காவல்துறையினர்  மற்றும் வனத்துறையினரின் எண்களைத் தேடத் தொடங்கினர்

 

ஒருவழியாக தகவலைப் பெற்று போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் அங்கு வந்த போது நமது மிஸ்டர் சிறுத்தை ஏற்கனவே ஹைட் அண்ட் சீக் விளையாட்டைத் தொடங்கியிருந்தார். இரு துறையினரும் அங்குலம் அங்குலமாக தேடுதல் வேட்டையை மேற்கொண்ட நிலையில் சிறுத்தை வெகு நேர்த்தியாக தண்ணி காட்டியது

 

சுமார் 3 மணி நேரம் சிறு இடுக்கு கூட விடாமல் தேடியும் சிறுத்தை சிக்காத நிலையில் சிறுத்தை அங்கு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. அந்த சிறுத்தை வணிக வளாகத்தின் சுவரை ஏறிக் குதித்து தப்பிச் சென்றிருக்க கூடும் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்த போது பதற்றம் மேலும் அதிகரித்தது

 

தப்பிச் சென்ற சிறுத்தை நகரின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் எவரையும் தாக்கவோ, காயப்படுத்தவோ, கொன்றுவிடவோ வாய்ப்புகளைக் கருதி பதற்றமடைந்த அதிகாரிகள் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். ஆனால் தேடும் முறையில் நிச்சயமாக ஒரு யுக்தி பூர்வமான மாற்றம் தேவைப்பட்டது

 

ஒருபுறம் வழக்கமான தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் மறுபுறம் நகரின் பல்வேறு சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆராய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இறுதியில் சிறுத்தை நகரின் முக்கிய ஹோட்டல்களில் ஒன்றான சத்கார் ரெசிடென்சியின் தரைக் கீழ்த் தளத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியது

 

அதனைத் தொடர்ந்து அங்கு எவரையும் செல்லவிடாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வனத்துறையினர், சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆறு மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய சிறுத்தையாருக்கு ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறுத்தை இங்குள்ள சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது