ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்பினால் கொன்றுவிடுவார்கள்! பீதி கிளப்பும் மலேசிய பிரதமர்!

சாகிர் அப்துல் கரீம் நாய்க்,கோட் சூட் அணிந்து டெலிவிஷனில் தோன்றி ஆங்கிலத்தில் பேசும் நவீன இஸ்லாமிய பீரங்கி.


இரண்டுகோடி பேர் அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கிறார்கள்.ஒஸாமா பின்லேடனை 'இஸ்லாமிய போர் வீரன்' என்று வர்ணித்தவர்.இந்தியா இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் அவர் மீது வழக்குகள் உள்ளன.பல வருடங்களாக மலேசியாவில் தங்கி பரப்புரை செய்துகொண்டு இருக்கிறார்.அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கேட்டபோது மலேசிய அரசு மறுத்து விட்டது.

அவர் மலேசியாவில் பேசிய இரண்டு கருத்துகள் அவரது மலேசிய வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிட்டது. மலேசியாவில்,மலாய் மக்களுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையை கொண்டது சீன இனம்,அடுத்தது , இந்திய வம்சாவழியினர்.அதில் பெரும்பகுதி தமிழர்கள்.முதலில் " இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம்களைவிட , மலேசிய சிறுபான்மை இந்துக்கள் 100 சதவீதம் அதிக உரிமைகளை அனுபவிக்கிறார்கள் " என்று கொளுத்திப் போட்டார்.

பெரிய அளவு எதிர்ப்பு வரவில்லை.சமீபகால கோட்ட பாரு என்ற இடத்தில் பேசும் போது,மலேசியாவில் இருக்கும் சீனர்கள் உடனே வெளியேற வேண்டும்.அவர்கள் நீண்ட நாட்களாகத் தங்கி இருக்கும் விருந்தாளிகள்,என்று பேச இப்போது சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்.

மலேசிய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.குல சேகரன் இருவரும் ,ஜாகிர் நாய்க்கை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இன்று நடந்த கேபினெட் கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டு இருந்தது.கேபினெட் கூட்டத்துக்குப் பிறகு இதுபற்றி பேசிய மலேசிய பிரதமர் மகாதிர் முகமது சொன்னதாகச் சொல்லப்படும் கருத்துத்தான் இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. " ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்கு அனுப்பினால்,கொன்று விடுவார்கள்.

வேறு எந்த நாடாவது அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்தால் அனுப்பி வைப்போம் " என்று சொன்னதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி இந்திய-மலேசிய ராஜிய உறவை பாதிக்கும் கருத்தை பழுத்த அரசியல்வாதியான  மகாதிர் முகமது எப்படிச் சொன்னார் என்பது புதிராக இருக்கிறது. மலேசிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஊடகங்கள் காத்திருக்கின்றன.