ஊராடா சுத்துறீங்க..? கொரோனா நோயாளியுடன் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட புள்ளீங்கோ! பிறகு நடந்தது தான்!

ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி வெளியே சுற்றி வந்த இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக காவல்துறையினர் நாடகமாடிய சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் இன்றுவரை 1683 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 752 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மதிக்காமல் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்த காவல்துறையினர், கொரோனா பரிசோதனை கருவி என்று பொய் கூறி வெற்று கருவியின் மூலம் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது போன்று நாடகமாடினர்.

பின்னர் இளைஞர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை சென்று மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர். இளைஞர்கள் ஆம்புலன்ஸில் ஏறியபோது, உள்ளே வேறு ஒரு நபர் முகமூடியுடன் அமர்ந்திருந்தார். அந்த நபர் புதிதாக உள்ளே வந்த இளைஞர்களிடம், "உங்களுக்கும் கொரோனா வேணுமா" என்று கேட்டவுடன் அனைத்து இளைஞர்களும் நடுநடுங்கினர். 

ஒரு நபர் ஆம்புலன்ஸ் ஜன்னலில் இருந்து வெளியே குதித்து ஓட முயன்றார். ஆனால் காவல்துறையினர் அவரை கட்டுப்படுத்தி மீண்டும் ஆம்புலன்ஸில் அடைத்தனர். இளைஞர்கள் அலற தொடங்கியவுடன் காவல்துறையினர் அவர்களை வெளியே வரவழைத்தனர். 

இளைஞர்களிடம் இது வெறும் நாடகம் என்றும், இதுபோன்று வெளியே சுற்றி வந்தால் நிச்சயம் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் அறிவுரை கூறினர். இளைஞர்களும் இனிமேல் ஊரடங்கை மீற மாட்டோம் என்று உறுதி அளித்தனர்‌. இந்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.