எடப்பாடிக்கு ஜே போடும் இளம் வாக்காளர்கள்... அரண்டு கிடக்கும் அறிவாலயம்!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தூக்கிக் கடாசும் வகையில், அதிரடியாக அறிக்கையை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க. இந்த தேர்தல் அறிக்கைக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அறிவாலத்தை அலற விட்டுள்ளது.


இது தொடர்பாக பேசும் அரசியல் ஆய்வாளர், ’’2011 தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவை விட மோசமான தோல்வியைச் சந்தித்த திமுக, சட்டசபை எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. இந்த நிலையில், இந்த தேர்தலுடன் திமுகவுக்கு முடிவுகட்டிவிட வேண்டும் என எடப்பாடி கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ரத்து, 6 பவுனுக்கு கீழே உள்ள நகைக்கடன் ரத்து, விவசாயிகளுக்கு மும்முனை மின்சார திட்டம் என அவர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களுக்கெல்லாம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு. இது தவிர அரசு ஊழியர்கள், இளம் வாக்காளர்கள் மத்தியிலும் எடப்பாடிக்கு ஜே! என்ற நிலைதான் காணப்படுகிறது.

இன்னொன்றையும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக எந்த ஒரு ஆளும் கட்சியும் தேர்தலை சந்திக்கும்போது, அந்த ஆட்சிக்கு எதிரான மனோபாவம் மக்களிடையே அதிகமாக காணப்படும். ஆனால், 10 ஆண்டு காலம் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் உள்ளபோதிலும் அரசுக்கு எதிரான அலை எதுவும் மக்களிடையே காணப்படவில்லை. இதுவே எடப்பாடிக்கு மிகவும் சாதகமான அம்சம்’’ என்றார்.

இன்னொரு புறம் எடப்பாடி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே அமோக வரவேற்பு காணப்படுவதாக கூறி, தேர்தல் பணிகளில் உற்சாகம் காட்டுகின்றனர் அதிமுகவினர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர்’’ நாங்கள் அறிவித்த திட்டங்களைத்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். வீட்டிற்கு ஒரு வாஷிங் மிஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, பெண்களுக்கான குலவிளக்கு திட்டம், மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்வு அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டம்,

ரேசன் பொருட்கள் வீடு தேடி சென்று விநியோகம் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளுக்கு நல்ல வரவேற்பு காணப்படுவதை ஓட்டுக் கேட்டுச் செல்லும்போது உணர முடிகிறது.

இது தவிர திமுக ஆட்சியின்போது காணப்பட்ட மின்வெட்டு, நில அபகரிப்பு போன்றவற்றையெல்லாம் மக்கள் மறக்கவில்லை. அதைச் சுட்டிக்காட்டி நாங்கள் பேசும்போது, அதை மக்கள் கைதட்டி வரவேற்கின்றனர்’’ என்றார் உற்சாகம் பொங்க. இந்த விவகாரங்கள்தான் தி.மு.க.வை டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம்.