தாய் உயிரிழந்தது தெரியாமல் 2 நாட்களாக சடலத்தை கட்டிப்பிடித்து படுத்திருந்த 1 வயது மகள்..! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

தன்னுடைய தாய் இறந்தது தெரியாமல் 2 நாட்களுக்கு சடலத்தையே மகள் கட்டிப்பிடித்திருந்த சம்பவமானது ரஷ்யாவில் சோகத்தை ஏற்படுத்தியது.


ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எகடெரீனா டெல்கினா என்பவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். 39 வயது நபர் ஒருவரை டெல்கினா காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் டெல்கினாவின் காதலர் முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 1 வயது குழந்தை தன்னுடைய தாய் இறந்ததை கூட அறியவில்லை. தாயின் சடலத்தை கட்டிப்பிடித்து அந்த குழந்தை உறங்கிக்கிடந்தது. 2 நாட்களாக அந்த குழந்தை எதையும் சாப்பிடாமல் பசியால் மயங்கியுள்ளது.

2 நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். 

அப்போது டெல்கினா இறந்து கிடந்ததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மயங்கிய குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டெல்கினாவின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.