சந்தேகம், பணம், டாக்டர் கனவால் சாகிறேன்! அம்மாவுக்கு கடிதம் எழுதிவிட்டு இளம் மாணவி எடுத்த விபரீத முடிவு!

நீட் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்த விரக்தியினால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் ஊருடையான் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவிக்கு 2 மகன்களும், இளைய மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

இளைய மனைவியின் மூத்த மகள் நன்றாக படிக்கக்கூடியவர். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 460 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் 12-ஆம் வகுப்பில் இவரால் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுக்க இயலவில்லை.

மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த இவர் நீட் பயிற்சி மையத்தில் படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இவரால் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க இயலவில்லை.

நீட் தேர்வு எழுதிய இவர் வெறும் 90 மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. இதனால் மன விரக்தி அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்ட  உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தன்னுடைய ஆசையை மெய்ப்பிக்க இயலாத விரக்தியில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

வழக்கில் திருப்புமுனையாக அவர் எழுதிவைத்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் அவர்,"என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நான் நினைத்தபடி என்னால் படிக்க இயலவில்லை என்பதால் நான் தற்கொலை செய்து கொண்டுள்ளேன். என் வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கிய எதிரியாக அமைந்தது. நான் மட்டும் நீட் தேர்விற்கு ஸ்பெஷல் டியூஷன் சென்றிருந்தால் இந்நேரம் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படித்து கொண்டிருந்திருப்பேன்.

இப்பொழுதும் நான் தற்கொலை செய்து கொண்டதற்கு நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். மாறாக உங்களை அசிங்கப்படுத்தியதாகவே யோசிப்பீர்கள். என்னால் வீட்டிற்குள் வேலைக்காரியாக அடைந்து செயல்பட முடியாது. சந்தேகப்பட்டு வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தால் எப்படி வாழ முடியும்? இதனால் என் கனவை மெய்ப்பிக்க இயலாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார். இந்த சம்பவமானது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.