உடம்பு வலிக்குதுனு சொன்னா..! மறுநாளே கடவுளிடம் சென்றுவிட்டாள்..! கொரோனாவுக்கு தங்கையை பறிகொடுத்த அண்ணன்!

கொரோனா வைரஸ் அறிகுறி தெரிந்த அடுத்த நாளிலேயே இளம்பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது அமெரிக்கா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகிலேயே இந்த வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டோர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது வரை அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலினால் 2,45,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இவற்றுக்கு மேலாக இளம்பெண் ஒருவர் அறிகுறிகள் தெரிந்த மறுநாளிலிலேயே உயிரிழந்த சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் எல் சால்வடார் நாட்டை சேர்ந்த இளைஞர் சீசர் பணியாற்றி வந்தார். இவரும் இவருடைய தங்கையான ஜெசிகாவும் அதே நகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் ஜெசிக்காவுக்கு கடந்த மாதம் 23ம் தேதியன்று உடல்வலி ஏற்பட்டுள்ளது. சாதாரண உடல் வழியாக இருக்கக்கூடும் என்று எண்ணிய சீசர், தன்னுடைய சகோதரிக்கு முதுகு வலிக்கான மாத்திரையை கொடுத்துள்ளார். அதன் பின்னர் மறுநாள் வழக்கம்போல சீசர் தன்னுடைய வேலைக்கு சென்று விட்டார். இதனிடையே ஜெசிக்காவின் உடல்நிலை மிகவும் மோசமானதாக அவருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

உடனடியாக அவர் ஜெசிகா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அதற்குள்ளேயே ஜெசிக்கா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் சீசரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து சீசர் கூறுகையில், "ஒரே நாளில் ஜெசிகா உயிரிழந்தது எங்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய தங்கை தன்னுடைய கடைசி நிமிடங்களில் வலியால் துடித்த போது என்னால் அவருடன் இருக்க இயலவில்லை.

அவளுக்கு தேவையான ஆறுதல்களை கூட எங்களால் கூற இயலவில்லை. அவருடைய இறுதிச்சடங்கில் கூட எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை. இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது" என்று கண்ணீர் மல்க கூறினார். ஜெசிகா இறந்த பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவமானது அமெரிக்கர்களை பெரிதளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.