மெய் மறந்து டிக்டாக் வீடியோ! குளத்திற்குள் குப்புற விழுந்த மாலாவுக்கு நேர்ந்த பயங்கரம்!

டிக் டாக் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்த போது குளத்தில் விழுந்து பெண் ஒருவர் இறந்துள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னும் பகுதி அமைந்துள்ளது. தங்க சுரங்கத்திற்கு பெயர்போன இடமாக கோலார் கருதப்படுகின்றது. மாலா என்ற பெண் ஒருவர் பி.பி.ஏ பட்டம் படித்து வருகிறார். இவருடைய வயது 20. இவர் தன் குடும்பத்தினருடன் கோலார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நன்றாக படிப்பவர். சென்ற ஆண்டு அவர் பயிலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் 10,000  ரூபாய் உதவித்தொகை பெற்றார்.

நேற்று முன்தினம் டிக் டாக் வீடியோ படம் எடுப்பதற்கு கோலார் பகுதியில் உள்ள வேதகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாட்டு தொழுவத்திற்கு சென்றுள்ளார். அங்கு டிக் டாக் வீடியோ எடுத்துக்கொள்ளும் மும்முரத்தில் குளம் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி குளத்தில் விழுந்து இறந்துள்ளார்.

இந்தத் தகவலறிந்த மாலாவின் பெற்றோர் கதறி அழுதனர். கோலார் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மாலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது கோலார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று சில வாரங்களுக்கு முன்னர் டிக் டாக் வீடியோ எடுக்க முயன்ற வாலிபரின் கை எலும்பு உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது.