" இந்தியில்தான் பேச முடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ" என்கிறது ஆயுஷ் அமைச்சகம் - மருத்துவர் கு.சிவராமன் வேதனை

வலிக்கின்றது ஆயுஷ் அமைச்சகத்தின் போக்கு என்று தமிழகத்தின் பிரபல சித்த மருத்துவரான கு.சிவராமன் வேதனை பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், இரு தினங்கள் முன்பு, மூன்று நாட்கள் தேசிய யோகா நேச்சுரோபதி மருத்துவர்களின் கருத்தரங்கில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர், " இந்தியில்தான் பேச முடியும்; புரியவில்லை என்றால் எழுந்து போ" என்றிருக்கின்றார்.


தமிழகத்தின் யோகா மருத்துவர் கேட்டதெல்லாம், " ஐயா மூன்று நாட்களாக பயிற்சி அளிப்பவர்கள் இந்தியிலேயே பேசுகிறார்கள். நாங்கள் எங்கள் மாநிலத்தில் பணி செய்யத் தேந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்காக வந்தவர்கள். பல மாநிலத்தவர் இருக்கிறோம். ஆங்கிலத்தில் பேசினால் நன்கு புரியுமே? "என கேட்டதற்குத்தான் இந்த பதில். தமிழகத்தில் இருந்து 37 பேர் இந்த இணைய வழிப்பயிற்சியில் இருந்ததாக தெரிய வருகிறது. 

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்த ஒரு சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியையும் இப்போது தூக்கிவிட்டார்கள். நேற்று, சித்த மருந்துக்காட்டுப்பாடு இணை இயக்குநர் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவரை நியமித்துள்ளனர். அந்த பதவிக்கு எம். டி,(சித்தா குணபாடம்) படித்த மருத்துவர்களை நியமிக்க நியமன வழிமுறை சொல்கிறது.

ஆனால் ஆயுர்வேத மருத்துவரை நியமிக்கின்றனர். இந்திய அளவில் இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டுத்துறையின் உதவி இயக்குனர் பொறுப்பு அது. தமிழகத்தில் இரு அரசுக் கல்லூரியிலும் தேசிய நிறுவனத்திலும் எம் டி குணபாடம் பயின்ற அனுவம் வாய்ந்த பலசித்த மருத்துவர்கள் இருக்கும்போது இப்படி யதேச்சையான அறிவிப்பு. 

கடந்த பத்து ஆண்டுகளாக, மத்திய அரசின் Ayurveda Siddha Unani Drug Technical Advisory Board (ASUDTAB) பாரம்பரிய சித்த மருத்துவ மூல நூல்கள் 75 நூட்களை, அரசு மருந்துச் சட்ட நூலில் இணைக்க போராடி வருகின்றது. இன்று வரை நடக்கவில்லை. அப்படி மரபு நூட்களை இணைத்தால் அந்த நூட்களில் உள்ள ஏராளமான (10,000க்கும் மேற்பட்ட) சித்த மருந்துகள் ஆய்வுகளுக்கும், விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டிற்கும் வரும். எப்போது கேட்டாலும் இப்பணிக்கு நொண்டிச்சாக்கு சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றது.

உலகம் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நோக்கி பயணிக்கின்றது. Medical pleuralism பற்றி அத்தனை வல்லுனர்களும் ஆராய்கின்றனர். இந்தியா மாதிரியான நாட்டின் வலிமையே அதன் பன்முகத்தன்மையும், அதன் பன்முகத்தன்மையின் ஒருமைப்பாடும்தான். மரபு மருத்துவத்துறையில் சித்தம், ஆயுர்வேதம், யோகம், யுனானி, ஓமியோபதி என அனைத்திலும் தனித்துவங்களும் பயனும் ஏராளமாய் உள்ளன.

இவை ஒருங்கிணைந்து பணியாற்றினால், இப்படியான பேரிடர் காலத்திலும் அல்லது வாழ்வியல் நோய்கள் குணப்படுத்துதலிலும் ஏராளமான பயனைக் கொடுக்க முடியும். அதற்கு பாரபட்சமற்ற அரவணைப்பு தேவை. ஆயுஷ்(AYUSH) என ஒருமித்த சொல்லாய் வைத்துவிட்டு, ஒரு துறையை ஒய்யாரத்திலும், பிற துறைகளை ஒரவஞ்சனையாயும் நடத்துவதும் என்ன நியாயம்? என்று கேட்டுள்ளார் மருத்துவர் கு.சிவராமன்.

நியாயமான கேள்விகள்.