வெறும் 17 நிமிடங்களில் 100% சார்ஜ்: அசத்தும் புதிய மொபைல் சார்ஜர்!

வெறும் 17 நிமிடங்களுக்குள் 100% முழு சார்ஜ் செய்யக்கூடிய புதிய சார்ஜரை ஸியோமி அறிமுகம் செய்ய உள்ளது.


ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பலருக்கும், அதன் சார்ஜ் தீரக்கூடாது என்ற கவலை மிக அதிகமாக இருக்கும். இதனால், கையிலேயே பவர் பேங்க் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுதவிர, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் பேட்டரியின் திறன் அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் மூலமாக, இந்த பிரச்னையை ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

இந்நிலையில், ஸியோமி நிறுவனம், 100W டர்போ சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. இது வெறும் 17 நிமிடங்களுக்குள், ஸ்மார்ட்ஃபோனுக்குத் தேவையான வகையில், பூஜ்ஜியத்தில் இருந்து 100% வரை உடனடியாக, சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகும்.

சமீபத்தில் ஓப்போ அறிமுகம் செய்த சூப்பர் விஓஓசி சார்ஜருக்குப் போட்டியாக, ஸியோமி களத்தில் இறங்கியுள்ளதாக, தொழில்நுட்ப ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சார்ஜரை வாங்குவதற்காக, நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.