அக்னி சட்டி எடுப்பவர்கள் இருக்க வேண்டிய விரத முறை தெரியுமா?

பூச்சட்டி என்றழைக்கப்படும் அக்னி சட்டி வழிபாடு மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், பக்தர்கள் விரதமிருந்து செய்கிறார்கள்.


காளியம்மன் ஆங்காரத்தின் உச்சமாக அக்னியை தனது கரங்களில் ஏந்தி நின்றாள். மாரி கற்பு நெறியின் வலிமையை காட்ட அக்னியை கரத்தினில் ஏந்தி நின்றாள்.

இத்தகைய சக்தி வாய்ந்த அக்னி சட்டி எப்படி உருவாக்கப்படுகிறது என்றால் மண்ணால் சட்டி செய்து அதனுள் உமியுடன் (நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களில் ஒன்று) பன்னீர் விட்டு பிசைந்து ஒரு உதறி கலவை போலாக்கி வைத்திருக்க வேண்டும். அதன் மேல் மா, அரசு, வேம்பு முதலான மரங்களின் குச்சிகளை அடுக்கி வைத்து அதன் மேற்பரப்பில் நெய்யை விட்டு, அதன் மேல் கற்பூரம் வைத்து நெருப்பை ஏற்ற வேண்டும். இதுதான் பூச்சட்டி என்றழைக்கப்படும் அக்னி சட்டி ஆகும்.

மாரியம்மன் கோவிலுக்கு அக்னி சட்டி எடுப்பவர்கள் 8, 11, 21 என்ற எண்ணிக்கையில் கொண்ட நாட்களில் விரதம் இருக்க வேண்டும். காளியம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கும் பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். காலையில் நீராடி பால் அல்லது இளநீர் அருந்தி விரதம் மேற்கொள்ளும் நபர் மதிய ஒரு வேளை மட்டும் பச்சரிசி சாதம் உட்கொள்ளவேண்டும். மாலையில் சிற்றுண்டி உண்ணலாம். தினமும் இருவேளை நீராட வேண்டும்.