கொரோனாவை விட மோசமானது தி.மு.க. _ ஓங்கி அடித்த ஓ.பி.எஸ்.

வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் இறுதியாகப் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க. ஒரு எஃகு கோட்டை, அதை எந்த கொம்பனாலும் அசைக்கவே முடியாது‘‘ என்று அறிவித்திருக்கிறார்.


அவர் மேலும் பேசுகையில், ‘அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்கிறார்கள். இந்த நேரத்தில் நல்லவர்கள் போன்று வேடம் போடும் தி.மு.க.வினரை தோலுரித்துக் காட்ட வேண்டும். தமிழகத்துக்கு தி.மு.க. செய்த துரோகங்களை அ.தி.மு.க. தொண்டர்கள் பொதுமக்களிடம் பட்டியலிட்டுக் காட்ட வேண்டும்.

லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையாலும், உழைப்பாலுமே இந்த இடத்துக்கு நாம் வந்துள்ளோம். தொடர்ந்து நாம் வெற்றி பெறுவோம் என்று பேசினார்.

முன்னதாக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேறியது. 

கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு முழு அதிகாரம், கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். 

அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம்.

தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம். உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, வேலை வாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு. மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.