பிரியாணி சிக்கனுக்குள் புழுத்துப் போய் வெளிவந்த புழுக்கள்! சென்னையின் பிரபல ஓட்டலில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த விபரீதம்!

திருநின்றவூரில் உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கனில் புழுக்கள் இருந்த சம்பவமானது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான திருநின்றவூரில் "99 டிகிரி ஃபாரன்ஹீட்" என்ற உணவகம் இயங்கி வருகிறது. 13-ஆம் தேதி இரவன்று இந்த உணவகத்திற்கு குடும்பத்தினர சாப்பிட வந்தனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த சிலர் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு முடித்துவிட்டனர். இன்னும் சிலர் அப்போதுதான் சிக்கனை சாப்பிட தொடங்கினர். சிக்கனை பிளந்தபோது, அதனுள் புழுக்கள் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.

உணவக மேலாளரை அழைத்து விசாரணை நடத்தியபோது,  வேறொரு சிக்கனை கொண்டு வருவதாக கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தங்களுடைய வாட்ஸ்அப் மூலம் புகைப்படம் எடுத்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தனர்.

தற்போது உணவு பாதுகாப்புத்துறை, குறிப்பிட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதுகுறித்து உணவக மேலதிகாரிகள் கூறுகையில், "கே.சி. சிக்கன் என்ற கடையில் இறைச்சி வாங்குவதாகவும், சிக்கன் புழுக்கள் இருந்ததற்கு அவர்களே காரணம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதற்கு உணவகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது" என்றும் அடாவடியாக பேசியுள்ளனர்.

தற்போது அந்த இறைச்சிக்கடை உரிமையாளர் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இறைச்சிக்கடை உரிமையாளர் தலைமறைவாகிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.