123 அடி உயர சிவபெருமான் சிலை..! கர்நாடக அதிசயத்தை தரிசித்து மகிழுங்கள்.

உயிரின் ஆதாரமாக ஆதி கடவுளாக வழிபடப்படும் சிவபெருமானுக்கு இந்தியாவெங்கும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன.


அனேக பழமையான கோயில்களில் சிவபெருமான் லிங்க ரூபமாகவே வழிபடப்படுகிறார். எனினும் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பல முறை நடந்த அந்நியர் படையெடுப்பில் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றிருப்பதை காட்டிலும் கட்டிடக்கலையில் மென்மையான பல கோயில்கள் இந்தியாவில் இருந்திருக்கும். கர்நாடக மாநிலத்தில் அரபிக்கடலோரத்தில் முருதேஸ்வரர் கோயில் சிவ பக்தர்கள் அனைவரும் தங்கள் வாழ்கையில் கட்டாயம் சென்று வழிபடவேண்டிய ஒரு கோயிலாகும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் பத்கள் தாலுக்காவில் உள்ள முருதேஸ்வரர் என்ற ஊரில் அரபிக்கடலோரத்தில் அமைந்திருக்கிறது இந்த முருதேஸ்வரர் சிவன் கோயில். இக்கோயிலில் தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவபெருமானின் சிலை அமைந்துள்ளது. இந்த 123 அடி உயரமான சிலையை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

முருதேஸ்வரர் கோயிலில் மூலவரின் சிலை மட்டுமில்லாது கோபுரமும் மிகப்பெரியதே. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கோபுரத்தை போன்றே மிகவும் உயரமானதாகும். 20 அடுக்கு கோபுரமான இதன் மேல் சென்று முருதேஸ்வரரின் மொத்த ரூபத்தையும் காணும் வகையில் லிப்ட் ஏற்பாடுகள் இங்கே செய்யப்பட்டுள்ளன.

இந்த கோயில் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டதாகும். இது கந்துக்கா என்ற சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் ராஜகோபுரம் 237அடி உயரமானதாகும். இப்போதிருக்கும் இந்த மிகப்பெரிய சிவபெருமானின் சிலைக்கு கீழே இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ மிர்தேஷ லிங்கம் என்ற ஆத்மலிங்கம் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த சந்நிதியினுள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

முருதேஸ்வர் கோயில் பார்ப்பதற்கு நவீன கட்டடக்கலையில் கட்டப்பட்டதாக தெரிந்தாலும், இதன் வரலாறு இராமாயண காலத்திலிருந்தே தொடங்குகிறது. ராவணன் ஒரு அரக்கனாக நமது கண்களுக்கு தெரிந்தாலும் அவனொரு சிறந்த பக்திமான். சிவனின் தீவிர பக்தன். அவனுக்கு சிவனிடம் இருக்கும் ஆத்மலிங்கத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாக இருந்தது. அதற்காக சிவனை நோக்கி தவம் இருந்தான்.

ஆத்மலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. அழியா வரம் தரக்கூடியது. அது ஒருவனிடம் இருந்தால் அவன் இந்த உலகையே தனது காலடியில் கொண்டு வந்துவிடலாம். அந்த ஆசையில்தான் ராவணனும் தவமிருந்தான். வழக்கம் போல் பக்தனின் பக்தியை மெச்சிய சிவன் ராவணனுக்கு ஆத்மலிங்கத்தை கொடுத்தார். ஒரேயொரு கண்டிஷன் மட்டும் போட்டார். ‘நீ உனது இடத்திற்கு சென்று சேரும் வரை இந்த ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது’ என்று. ராவணனும் இதற்கு ஒத்துக்கொண்டான்.

இந்த விஷயம் நாரதருக்கு தெரியவந்தது. சும்மா இருப்பாரா..? இராவணன் தனது இடத்திற்கு ஆத்மலிங்கத்தை சென்று சேர்த்துவிட்டால் உலகில் யாரும் அவனை வெல்ல முடியாதே இதை தடுத்தே ஆகவேண்டும் என்ற அச்சம் நாரதருக்கு வந்தது. உடனே விநாயகரிடம் சென்று முறையிட்டார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார். விநாயகர் ஒரு பிராமண சிறுவனாக மாறி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

இராவணன் தினமும் மாலையில் தவறாமல் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டவன். இராவணன் கோகர்ண அருகே வரும் போது விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தின் சக்தியால் சூரிய ஒளியை மறைத்தார். இராவணன் மாலை நேரம் நெருங்கி விட்டது என்ற எண்ணத்தில் பிரார்த்தனை செய்ய முயல்கிறான். ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்வது என்று நினைக்கும் போது சற்று தொலைவில் பிராமண சிறுவன் வேடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் விநாயகரை இராவணன் அழைக்கிறான்.

தனது பூஜை முடித்து வரும் வரை இந்த லிங்கத்தை தரையில் வைக்காமல் கையிலேயே வைத்திருக்கும்படி சொல்கிறான். விநாயகரும் சரி என்கிறார். ஆனால், மூன்று முறை அழைப்பதற்குள் வந்துவிட வேண்டும் என்று விநாயகர் கேட்டுக்கொண்டார். ராவணனும் ஒத்துக்கொண்டான். விநாயகர் வேகவேகமாக ராவணனை மூன்று முறை அழைத்துவிட்டு ஆத்மலிங்கத்தை தரையில் வைத்துவிட்டார்.

வேகமாக ஓடிவந்து பார்த்த இராவணன் அதிச்சியடைந்து போனான். அதற்குள் விஷ்ணுவும் தனது மாயையை விலக்கிக்கொண்டார். பகல் வந்தது. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த கடும் கோபம் கொண்டான். வினாயகர் லிங்கத்தை கோகர்ணத்தில் வைத்து விட்டதால், அது அங்கு நிலைத்து விட்டது. ராவணன் தனது பலத்தால் எடுக்கப் பார்த்தான். பூமியிலிருந்து இழுக்கப் பார்த்தான். லிங்கம் அசையவில்லை.

லிங்கத்தை சுற்றியிருந்த துணி 32 கிமீ தொலைவில் கடற்கரையில் இருக்கும் கண்டுக மலையில் விழுந்தது. அதனால்தான் இங்கு சிவன் முருடேஸ்வர் என்ற அகோர உருவத்தில் இருக்கிறார். இந்த நிகழ்வை விளக்கும் அழகிய சுதை சிற்பங்களைக் கோயிலின் மேற்பகுதியில் காணலாம். சிலையின் கீழுள்ள குகையில் இதை ஒரு கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள்.

எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.