கொரோனா வைரஸால் உலக நாடுகளில் பொருளாதாரம் தேக்கம்.. பங்குச் சந்தை பாதிப்பு!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பன்னாட்டு வணிகம் அனைத்து நாடுகளிலும் உள்ள பங்குச் சந்தையை பெரிதும் பாதித்து வருகிறது.


இதன் காரணமாக இன்று காலை சுமார் 2500 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 27 ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள்தொடங்கியது மும்பை பங்குச் சந்தை. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்த வேளையில். காலை 11 மணி முதல் அடுத்த 15 நிமிடங்களுக்கு பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு தொடங்கிய வர்த்தகத்தில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்திய வரலாற்றில் 10 நாட்களில் இரண்டாவது முறையாக வர்த்தகம் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். மீண்டும் தொடங்கிய வர்த்தகத்தில்

வங்கி நிஃப்டி 15 சதவிகிதம், ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி முறையே 23 மற்றும் 24 சதவிகிதம் சரிந்தது, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை தொடர்ந்து சரிவை சந்தித்து வங்கித் துறையை சார்ந்த பங்குகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தை நிப்டியில் 20 சதவிகிதம் சரிந்தது, மேலும் மாருதி சுசுகி, மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த பங்குகள் தொடர்ந்து சரிவடைந்தது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்சியல், ஆக்சிஸ் வங்கி, மேக்ஸ் பைனான்சியல், பந்தன் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, என்ஐஐடி டெக், பஜாஜ் ஃபின்சர்வ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், கனரா வங்கி மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட 1,140 பங்குகள் புதிய 52 வார விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பியூச்சர் ரீடெய்ல், வக்ரேஞ்ச், டாடா மோட்டார்ஸ், மதர்சன் சுமி, ஐஆர்சிடிசி மற்றும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் உள்ளிட்ட 690 பங்குகள் சென்செக்ஸில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகியது. வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 3 ரூபாய்10 பைசாவில் முடிவடைந்தது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்குகள் 60 ரூபாயிலும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்குகள் 6.70 ரூபாயிலும். பாங்க் ஆஃப் பரோடா வின் பங்குகள் 53 ரூபாயிலும் இறுதி வர்த்தகத்தில் முடிவடைந்தன. ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான மந்த நிலை.

இந்திய பங்குச்சந்தையில் இன்று கடுமையாக எதிரொலித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்திய பங்குச்சந்தை இன்னும் பலமாக வீழ்ச்சியடையும் என்றும் இதன் காரணமாக நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் நான்காவது காலாண்டில் 2.5 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது உலக வணிகர் தரவரிசை பட்டியலிலிடும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம்.

மணியன் கலியமூர்த்தி